கருப்பூர்:-
கருப்பூர் அருகே உள்ள சின்ன வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி லலிதா (வயது 60), விவசாய கூலித்தொழிலாளி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் லலிதாவுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வீட்டில் பேசாமல் வசித்து வந்துள்ளனர்.
நேற்று மதியம் முதல் லலிதாவை திடீரென காணவில்லை. இதனால் உறவினர்கள் அப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் அவர் அணிந்திருந்த செருப்பு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இரவு வரை தேடி கிணற்றில் மூழ்கி பலியான லலிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லலிதா கிணற்றில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.