கட்டி முடிக்காத கட்டிடத்தில் படுகாயத்துடன் கிடந்த பெண் சாவு

கட்டி முடிக்காத கட்டிடத்தில் படுகாயத்துடன் கிடந்த பெண் சாவு

Update: 2022-12-09 18:45 GMT

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் கட்டி முடிக்காத கட்டிடத்தில் படுகாயத்துடன் கிடந்த பெண் பரிதாபமாக இறந்தார். இவர் அடித்துக்கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன், மனைவிக்கு இடையே தகராறு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பட்டி தாசரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ஹேமலதா (வயது28). இவர்களுக்கு கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இனித்த இவர்களின் குடும்ப வாழ்க்கை நாளடைவில் கசப்பாக மாறியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஹேமலதா சரவணம்பட்டி கீரணத்தம் புதுரோடு பகுதியில் உள்ள தனது தந்தை நல்லசாமி வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இருந்த ஹேமலதாவை பிரபு பார்த்து சென்றுள்ளார்.

சாவு

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஹேமலதா தனது பெற்றோரிடம் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார். நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமலதாவை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஹேமலதா அவர்களது வீட்டின் அருகே உள்ள கட்டி முடிக்கப்படாத அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் ஹேமலதா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹேமலதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹேமலதா கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை அடித்து கொலை செய்தார்களா என்பது மர்மாக உள்ளதால், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்