உப்பிலியபுரத்தை அடுத்த மாராடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி கவிதா (வயது 45). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துவைத்த துணிகளை வீட்டின் முற்றத்தில் உள்ள கம்பியில் உலர வைத்துள்ளார். அப்போது, காற்று வீசியதில் அங்கு இருந்த மின்வயர் கம்பியில் உரசியது. இதில் கவனிக்காமல் கவிதா கம்பியை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அப்போது, மருத்துவ உதவியாளர் பரிசோதித்ததில் கவிதா இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.