அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு

Update: 2022-08-18 19:13 GMT

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் இறந்தார். இதுதொடர்பாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

அறுவை சிகிச்சை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மன்னங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 39). பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி(32). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுமதி கர்ப்பம் அடைந்தார்.

கர்ப்பிணியாக இருந்த சுமதி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சுமதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் சுமதியின் உடல்நிலை மோசம் அடைந்தது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுமதியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

போலீசில், கணவர் புகார்

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ராஜேந்திரன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மனைவி சாவுக்கு காரணமான பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்