காட்டு யானை தாக்கி பெண் பலி: கூடலூர் வன அலுவலகம் முற்றுகை-நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது

காட்டு யானை தாக்கி பெண் பலியானதை கண்டித்து கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-23 13:17 GMT

கூடலூர்

காட்டு யானை தாக்கி பெண் பலியானதை கண்டித்து கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் பொதுமக்களை தாக்கி கொன்று விடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்ன சூண்டியை சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவரை காட்டு யானை கொன்றது. இதனால் தொடர் தாக்குதலால் ஓவேலி பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதைத்தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அகழி தோண்ட வேண்டும். காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து கூடலூர் மாக்கமூலா வன அலுவலர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

போராட்டம் நடத்திய 30 பேர் கைது

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் வன அலுவலர் அலுவலக வளாகத்துக்குள் நுழையாமல் தடுத்து நின்றனர். பின்னர் கையில் கொடிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் வனத்துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பொன்மோகன் தாஸ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கேதீஸ்வரன், நிர்வாகிகள் வேலாயுதம், ஸ்ரீதர், சிவக்குமாரன் ஆகியோர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்