காட்டு யானை தாக்கி பெண் பலி

காரமடை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார்.

Update: 2023-02-12 18:45 GMT

காரமடை, 

காரமடை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார்.

மாடுகளை வளர்த்தார்

கோவை மாவட்டம் காரமடை அருகே கோப்பனாரி பகுதி தமிழக-கேரள எல்லையையொட்டி உள்ள வனப்பகுதியில் அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுந்து வருகின்றன. அப்போது மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

கோப்பனாரி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கருப்பாத்தாள் (வயது 59). இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று கருப்பாத்தாள் வழக்கம்போல் தனது மாடுகளை அருகே உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று உள்ளார்.

யானை தாக்கியது

அப்போது முட்புதரில் நின்றிருந்த காட்டு யானை திடீரென கருப்பாத்தாளை நோக்கி ஓடி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓட முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டு யானை கருப்பாத்தாளை தாக்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கருப்பாத்தாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்