குழந்தை பிறந்த 2 நாளில் பெண் சாவு; தனியார் ஆஸ்பத்திரியில் திரண்டு உறவினர்கள் வாக்குவாதம்

பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்த 2 நாளில் பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-22 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மடத்தூரை சேர்ந்த சிவசங்கரி (வயது 22) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. சிவசங்கரி பி.எஸ்.சி. நர்சிங் படித்து உள்ளார். திருமணத்துக்கு முன்பு வரை அவர் சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவசங்கரியை பிரசவத்துக்காக கடந்த 19-ந்தேதி பாவூர்சத்திரம் செல்வவிநாயகபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கரி நேற்று காலையில் திடீரென மயக்கம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டு வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிவசங்கரியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்