கந்திகுப்பம் அருகே பயங்கரம்: ஆடு மேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு

கந்திகுப்பம் அருகே ஆடு மேய்த்த பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-09 17:36 GMT

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே ஆடு மேய்த்த பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆடு மேய்க்கும் பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள அகசிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதா. இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). அதேபகுதியை சேர்ந்தவர்கள் முனியம்மாள், கோவிந்தன். உறவினர்களான இவர்கள் 3 பேரும் நக்கல்பட்டி மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர்.

அப்போது நக்கல்பட்டி இருளர் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி திம்மராஜ் (35) என்பவர் வனப்பகுதியில் சுற்றி கொண்டிருந்தார். இவர் ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக் கூறி சாப்பாடு வாங்கி தின்று விட்டு அங்கேயே இருந்துள்ளார். லட்சுமி, முனியம்மாள், கோவிந்தன் ஆகியோர் வெவ்வேறு பகுதிகளில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.

கழுத்தை அறுத்து கொலை

அப்போது திடீரென லட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் முனியம்மாள், கோவிந்தன் ஆகியோர் ஓடிவந்து பார்த்தபோது புதரில் லட்சுமி உடல் முழுக்க வெட்டுக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊருக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து லட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் வனப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் லட்சுமி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திம்மராஜ், லட்சுமியை சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

தொழிலாளிக்கு வலைவீச்சு

இந்த படுகொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபிதா வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தொழிலாளி திம்மராஜை வலைவீசி தேடி வருகிறார். அவரை கைது செய்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆடு மேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்