குழந்தைக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி
குழந்தைக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலை முயற்சி
கோவை
காதல் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு கோவையில் 1½ மாத பச்சிளம் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (வயது 34). இவர்களுடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ராஜதோப்பு ஆகும். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். காதல் திருமணம் செய்துகொண்டதால் சொந்த ஊருக்கு செல்லாமல் கோவையிலேயே இருந்து வந்தனர். இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நாகலட்சுமிக்கு கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை பார்க்க உறவினர்கள் வந்து இருந்தனா். பின்னர் குடும்பத்திருடன் இணைந்ததால் ரங்கசாமி, நாகலட்சுமி ஆகியோர் பெண் குழந்தையுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றனர். இதற்கிடையே ரங்கசாமி மட்டும் பொங்கல் பண்டிகை முடிந்து கோவை திரும்பி வழக்கம்போல் பணிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாகலட்சுமி தனது 1½ மாத பச்சிளம் பெண் குழந்தையுடன் கோவைக்கு வந்தார்.
கணவரின் நடத்தையில் சந்தேகம்
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ரங்கசாமியின் நடத்தையில் சந்தேகம் உள்ளது என்றும், கணவரை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள் என்றும் நாகலட்சுமியிடம் கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காதல் மனைவி நாகலட்சுமி தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இதுகுறித்து ரங்கசாமியிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் நம்மை கைவிட்டுவிடுவாரோ என்று மனமுடைந்த நாகலட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் சாணிப்பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்தார். அப்போது தனது குழந்தையின் எதிர்காலம் என்னாகுமோ என்று எண்ணிய அவர் தனது 1½ மாத பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடரை கொடுத்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிபடி தாயும், குழந்தையும் மயங்கினர்.
அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
இதைப் பார்த்து அக்கம் பக்கத்ததினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து நாகலட்சுமியின் கணவர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவி மற்றும் 1½ மாத குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அதில் பச்சிளம் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது என்றும், நாகலட்சுமியின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.