காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளை கடத்திய வழக்கில் பெண் கைது

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளை கடத்திய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-19 08:14 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (28). பிரசவத்திற்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க குடும்பத்தினருடன் அவரது மகன் சக்திவேல் (3), உறவினர் குழந்தை சவுந்தர்யா (7) ஆகியோர் அங்கு வந்தனர். பார்த்துவிட்டு அங்கே தங்கி இருந்தவர்களை அடையாளம் தெரியாத ஒரு பெண் அங்கிருந்து கடத்தி் சென்றார்.

விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன், காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் காஞ்சீபுரத்தை அடுத்த அஞ்சூர் பகுதியில் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தைகளை கடத்தி சென்ற பெண் லட்சுமி என்பவர் அங்கிருந்து தப்பிய நிலையில் அவரது கணவர் வெங்கடேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை காஞ்சீபுரத்தை அடுத்த அஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் பதுங்கி இருந்த லட்சுமியை (40) கைது செய்த போலீசார் குழந்தையை கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்