மளிகை கடைக்காரர் தற்கொலை வழக்கில் பெண் அதிரடி கைது

சின்னசேலம் அருகே மளிகை கடைக்காரர் தற்கொலை வழக்கில் பெண்ணை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-10 18:45 GMT

சின்னசேலம்,

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது42). இவர் சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தில் துரைசாமி என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தான் வசித்து வந்த வாடகை வீட்டில் ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரமேஷ் தான் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவரது மனைவிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ ஒன்று வெளியானது.

அதில் ரூ.23 லட்சம் மற்றும் 13 பவுன் நகைகளை சிறுபாக்கத்தை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்துள்ளேன். யார், யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறேன் என்ற விவரம் நாம் எழுதி வைக்கும் கணக்கு பையில் உள்ளது. அதை பார்த்துக்கொள். பெண்ணிடம் கொடுத்த பணத்தை கேட்டால், அவர் நமது பிள்ளைகளை குறிவைத்து மிரட்டுகிறாள். என ரமேஷ் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

இதில் ரமேஷ் கடன் வாங்கி சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி கோமதி (37) என்பவரிடம் நகை மற்றும் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அதை திருப்பி கேட்டபோது அந்த பெண் அவரை மிரட்டி உள்ளார். இதன் காரணமாக ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து ரமேசை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி கோமதியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் கொடுத்த பணத்தை கோமதி என்ன செய்தார் என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்