கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் கைது
கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் கார்த்தி (வயது 27). இவர் பெருந்துறையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
கார்த்தியின் உறவுக்கார பெண்ணான மீனாதேவி (28) என்பவர் அதே பகுதியில் தனது 6 வயது மகளுடன் வசித்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக மீனாதேவி தன்னுடைய கணவரை பிரிந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக்கும், மீனாதேவிக்கும் இடையே கள்ளக்காதல் உண்டானது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.
கொதிக்கும் எண்ணெயை...
இதனிடையே வேறு ஒரு பெண்ணை கார்த்தி காதலித்ததாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்ததாகவும் மீனாதேவிக்கு தொியவந்தது. இதனால் கார்த்தி மீது மீனாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாதேவியின் வீட்டுக்கு காா்த்தி சென்று உள்ளார். அப்போது இதுதொடர்பாக கார்த்தியிடம், மீனாதேவி கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. வாய்த்தகராறு முற்றியதில் அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது மீனாதேவி ஊற்றி உள்ளார்.
கைது
இதனால் கார்த்தி வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாதேவியை கைது செய்தனர். மீனாதேவி, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்தி மீது மீனாதேவி திராவகத்தை வீசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணையின்போது கொதிக்கும் எண்ணெயைதான் வீசியதாக அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.