வலி நிவாரண மருந்தை உணவில் கலந்த பெண் கைது

கொடைக்கானல் தனியார் கிளப்பில் சமைத்த உணவில் வலி நிவாரண மருந்தை கலந்து பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-31 16:26 GMT

வலி நிவாரண மருந்து

கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கும் சொகுசு அறை, பொழுதுப்போக்கு அம்சங்கள், உடற்பயிற்சி கூடம், மதுபான பார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கிளப் நிறுவன பணியாளர்கள் வழக்கம்போல் உணவு சாப்பிட்டனர். அப்போது குழம்பில் சிவப்பு நிற திரவம் மிதந்தது. இதனை பணியாளர்கள் முகர்ந்து பார்த்தபோது வலி நிவாரண மருந்து வாசனை வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஏதோ ஒரு எண்ணெய் என்று நினைத்து பணியாளர்கள் அதனை சாப்பிட்டனர். ஆனால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

பெண் கைது

இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கிளப்பில் சமையல் கலைஞராக பணியாற்றிய செண்பகனூரை சேர்ந்த மலர்விழி (வயது 47) என்பவர் வலி நிவாரண மருந்தை குழம்பில் வேண்டுமென்றே கலந்தது தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலர்விழி, கிளப்பில் மீதமிருந்த உணவை வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். இதுகுறித்து பணியாளர்கள் கிளப்பின் மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் மலர்விழி வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கிளப் பணியாளர்கள் மீதான ஆத்திரத்தில் மலர்விழி குழம்பில் வலி நிவாரண மருந்தை கலந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்