கூலித்தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் கைது

புதுக்கோட்டையில் கூலித்தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-21 19:13 GMT

கூலித்தொழிலாளி

புதுக்கோட்டை ஸ்ரீ நகரை சேர்ந்தவர் அறிவுமொழி (வயது 33). இவர் கணவரை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து, கூலிவேலை செய்து வருகிறார். அவரது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டை சின்னப்பாநகர் 2-ம் வீதியை சேர்ந்த நாராயணசாமியின் மனைவி இந்திராவிடம் (53) ரூ.5 ஆயிரம் கடன் கேட்டார். அதற்கு இந்திரா, அறிவுமொழியிடம் வெற்று புரோ நோட், பத்திரம், காசோலை மற்றும் வெற்று பேப்பரில் கையொப்பம் வாங்கி கொண்டு கடன் கொடுத்துள்ளார்.

மேற்படி பணத்திற்கு தினமும் மீட்டர் வட்டி என ரூ.250 பெற்றுக்கொண்டதாகவும், அறிவுமொழியால் அசல் பணத்தை இந்திராவுக்கு கொடுக்க முடியாததால் கூடுதலாக ரூ.10 ஆயிரத்தை அறிவுமொழிக்கு இந்திரா கடன் அளிப்பதாக கூறி அதில் ஏற்கனவே வாங்கிய பணத்திற்கு வட்டியை எடுத்துக்கொண்டு சொற்ப பணத்தினை அவரிடம் கொடுத்துள்ளார்.

வட்டி கேட்டு மிரட்டல்

இதற்கிடையில் அறிவுமொழி வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் சேர்த்து ரூ.40 ஆயிரம் தர வேண்டும் என இந்திரா கேட்டுள்ளார். வீட்டு வேலை செய்து வட்டி மட்டும் கொடுத்து வந்த அவரால் முழுமையாக வட்டி கொடுக்க முடியவில்லை.

இதனால் அவரை தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டியிருக்கிறார். மேலும் தனக்கு தெரிந்த சார்லஸ் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வட்டிதொழில் செய்வதாகவும் அவரிடம் ரூ.30 ஆயிரத்தை கடனாக அறிவுமொழிக்கு இந்திரா வாங்கி கொடுத்துள்ளார். அதில் தனக்கு வட்டிப்பணம் என ரூ.28 ஆயிரத்து 500-ஐ எடுத்துக்கொண்டுள்ளார்.

பெண் கைது

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அறிவுமொழியின் வீட்டிற்கு இந்திராவும், சீனிவாசனும் அடியாட்களை அழைத்து சென்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வட்டியுடன் சேர்த்து பணத்தினை தரவில்லையென்றால் அறிவுமொழியின் குழந்தைகளை கடத்தி கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் அறிவுமொழி புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி தடைச்சட்டத்தின் கீழ் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்திராவை கைது செய்தனர். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்