பெண் போலீசை தாக்கிய பெண் கைது
பஸ்சில் தனது இருக்கையில் அமர்ந்ததை தட்டிக்கேட்ட பெண் போலீசை தாக்கிய பெண் கைது செஞ்சி பஸ் நிலையத்தில் பரபரப்பு;
செஞ்சி
செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பத்மாவதி. இவர் நேற்று மதியம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தபால் எடுத்துச் செல்வதற்காக செஞ்சி பஸ் நிலையத்தில் நின்ற தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அப்போது பத்மாவதி இருக்கையில் கைப்பையை வைத்து விட்டு கீழே இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இருக்கையில் வைத்திருந்த பை கீழே கிடந்தது. அதில் வேறு ஒரு பெண் அமர்ந்து இருந்தார். இதை தட்டிக்கேட்ட பத்மாவதியை அந்த பெண் ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. விசாரணையில் அந்த பெண் பண்ருட்டியை சேர்ந்த புருஷோத்தமன் மனைவி சவுந்தர்யா(வயது 32) என்பதும், மேல்மலையனூர் கோவிலுக்கு வந்துவிட்டு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி செல்ல இருந்ததும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.