அரசு பஸ்சில் ஏறாமல் மாணவர்கள் திடீர் போராட்டம்

2 பஸ்களையும் முறையாக இயக்கக்கோரி அரசு டவுன் பஸ்சில் ஏறாமல் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-14 19:41 GMT

வள்ளியூர் (தெற்கு):

2 பஸ்களையும் முறையாக இயக்கக்கோரி அரசு டவுன் பஸ்சில் ஏறாமல் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 பஸ்கள்

வள்ளியூர் அருகே உள்ள வில்வனம்புதூர் கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் வள்ளியூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்கள் மாலையில் வீடு திரும்புவதற்கு ஏதுவாக மாலை 5 மணிக்கும், 5.30 மணிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக 5 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே பஸ்சில் மட்டும் மாணவர்கள், பொதுமக்கள் சென்றதால் கடும் அவதிப்பட்டனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் நேற்று மாலையில் வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு மேற்படி கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சில் மாணவர்கள் ஏறாமல், பஸ்சை காணவில்லை என்று பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊருக்கு மாலை நேரத்தில் 2 பஸ்களையும் சரியான நேரத்திற்கு இயக்கினாமல் மட்டுமே பஸ்சில் ஏறிச்செல்வோம் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பஸ்சில் ஏறிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்