மதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு - வைகோ கண்டனம்
கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.;
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள்வரை ஒன்றிய அரசின் உதவித் தொகையைப் பெற்று கல்வி கற்று வந்தார்கள். இந்தத் திட்டத்திலும் கைவைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இந்த உதவித் தொகை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனி கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு தொடங்கி, 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்குக் கிடைத்து வந்த ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை இனி கிடைக்காது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் நடத்தி வரும் மோடி அரசின் அநியாயமான தாக்குதல் நடவடிக்கையே இது. சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை மறுமலர்ச்சி தி.மு.க. வன்மையாகக் கண்டிக்கிறது. 9 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் மீதும் இந்தத் தாக்குதல் நாளை தொடரலாம் என்ற அச்சம் இப்போது அனைவரிடமும் எழுந்துள்ளது. கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிற மாநில முதல்வர்களும், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து போர்க்குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.