கலெக்டர் அலுவலகத்துக்கு வாடிய நெல் பயிருடன் வந்த 16 கிராம மக்கள்
வாடிய நெல் பயிருடன் 16 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
மானாமதுரையை அடுத்துள்ள கிளங்காட்டூர், அன்னவாசல், நெடுங்குளம், உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வாடிய நெல் பயிர்களுடன் வந்து நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மனு அளித்தனர். அந்தமனுவில் கூறியுள்ளதாவது, 16 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த 16 கிராம கண்மாய்களுக்கும் வைகை ஆற்று நீர் செல்லும் நாட்டார் கால்வாய் முகப்பு அன்னியேந்தல் அருகில் உள்ளது.
தற்போது திறந்து விடப்பட்டுள்ள வைகை நீர் தற்சமயம் கண்மாய் முகப்பை அடைந்துள்ளது. இந்நிலையில் கால்வாய் முகப்பு பகுதிக்கு தண்ணீர் வராமல் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 16 கிராம கண்மாய்களும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இந்த தண்ணீரை நம்பி விவசாயிகள் தங்கள் நிலத்தில் ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நாற்று வளர்ந்துவரும் நிலையில் திடீரென கால்வாயில் தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டதால் பயிர்கள் வாடி வருகிறது. எனவே கால்வாயை திறந்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தனர்.