நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டம் வாபஸ்

நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2023-02-02 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் மற்றும் விவசாயிகளிடம் கெடுபிடி வசூல் நடப்பதை கண்டித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வருகிற 6-ந் தேதி சிவகங்கை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் அமைப்பின் மாநில பொது செயலாளர் எம்.அர்ச்சுனன், மாநில செயலாளர் இராம.முருகன், மாநில துணை தலைவர் மச்சேஸ்வரன், மாவட்ட செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த விதமான கட்டணங்களும் வசூல் செய்யப்படமாட்டாது. சுமைப்பணி தொழிலாளிகளுக்கு நுகர் பொருள் வாணிப கழக நிர்வாகம் 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு 10 ரூபாய் கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரம் சிப்பம் பிடிக்கப்படும். இந்தக்கூலியை 2 நாட்களுக்கு ஒரு முறை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் கொள்முதல் நிலையங்களில் மின்சார கட்டணத்துக்கென்று தனியாக எதுவும் வசூல் செய்யப்படமாட்டாது. சணல், சாக்குப்பை, நெல் தூற்றும் எந்திரம் ஆகியவற்றை கொள்முதல் மையத்திற்கு கொண்டு செல்ல கட்டணம் வசூல் செய்யப்பட மாட்டாது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

பின்னர் பொது செயலாளர் அர்ச்சுனன் கூறியதாவது:- கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும், நெல் அறுவடை நேரத்தில் பாதிப்பு ஏற்படும் வகையில் மழை பெய்து வரும் நிலையிலும் 6-ந் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்படுகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்