இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ்

காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-07-01 16:13 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இடைத்தேர்தல்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் 17-வது வார்டு கவுன்சிலராக இருந்த தி.மு.க. பிரமுகர் மாதையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து 17-வது வார்டுக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 13 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் கட்சி சின்னம் தொடர்பாக நிலவி வரும் குழப்பத்தால் அ.தி.மு.க. சார்பில் வேட்பு மனு செய்த 2 பேர் நேற்று மனுக்களை வாபஸ் பெற்றனர். இதேபோல் பா.ஜ.க. வேட்பாளர் உள்பட 10 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தொண்டர்கள் அதிர்ச்சி

இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஒட்டினர். இதன்படி தி.மு.க. சார்பில் சந்திர மாதையன், பா.ம.க. சார்பில் அருள்மூர்த்தி, தே.மு.தி.க. சார்பில் அசோக்குமார் ஆகியோர் 17-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தலில் கட்சி சின்னம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்