வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-14 18:45 GMT

தூத்துக்குடியில் வாக்காளர் அடைாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆதார் எண் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த பணி கடந்த 01.08.2022 முதல் தொடங்க ஆணையிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியிலும் இந்த பணியானது 01.08.2022 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று படிவம் 6பி பூர்த்தி செய்து ஆதார் எண் விவரங்களை பெற்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

54 சதவீதம்

தற்போது வரை தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 54 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இதையடுத்து வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தி படிவம் 6பி மூலம் ஆதார் எண் வாக்காளர்களிடம் இருந்து பெற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர்களும் தாங்களாகவே நேரடியாக தங்களது ஆதார் எண் விவரங்களை Voters Helpline App என்ற செல்போன் செயலி மூலம் அல்லது NVSP என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செல்போன் செயலியை கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்