கூடுதல் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம்
வத்திராயிருப்பு அருகே நெல் கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டதால் கூடுதல் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே நெல் கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டதால் கூடுதல் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல் சாகுபடி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், மாத்தூர், இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல்லை தான் சாகுபடி செய்துள்ளனர்.
அறுவடை பணிகள் ஓரளவிற்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் கான்சாபுரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
வாக்குவாதம்
நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் காலம் முடிந்து விட்டதால் கொள்முதல் நிலையம் மூடிவிட்டதாகவும், இனி நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கான்சாபுரம் பகுதியில் இன்னும் அறுவடை பணிகள் முடியவில்லை என்றும், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலையத்தில் எடை போடுவதற்காக குவித்து வைத்திருப்பதாகவும் விவசாயிகள் கூறினர். இதையடுத்து ஏற்கனவே எடைபோட்ட நெல் மூடைகளை லாரியில் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தி விவசாயிகள், தொடர்ந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தற்போது கொள்முதல் நிலையத்தில் களத்தில் மழையில் நெற்பயிர்கள் நனைந்து முளைத்துவிட்டதாகவும் உடனே அதிகாரிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், நெல் கொள்முதல் இன்னும் 10 நாட்கள் கூடுதலாக செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள், அதிகாரிகளிடம் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூமாப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.