பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 6,377 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
புதிய பாதை திட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சார்பில், மாவட்டத்தில் முதன்முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளி வந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் திருந்தி வாழ்வதற்காக புதிய பாதை என்னும் மனமாற்றத்துக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் மனநல மருத்துவர், சட்ட வல்லுநர், போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த திட்டம் தொடக்க விழா நேற்று தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
திருந்தி வாழ...
அப்போது, பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுபடுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை போலீஸ் நிலையங்களில் வைத்து இந்த குழுவினர் ஆலோசனைகள் வழங்குவார்கள். மேலும் மேற்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும்.
மேலும் 3 ஆயிரத்து 620 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 24 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்து உள்ளன. அதே போன்ற மாவட்டத்தில் 6 ஆயிரத்து 377 சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. கடந்த 1 ½ வருடங்களில் நடந்த கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், போக்சோ வழக்குகள் போன்ற அனைத்து குற்ற வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் முறப்பநாடு காவல் நிலைய வி.ஏ.ஓ கொலை வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் 2 பேருக்கும் 143 நாட்களில் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 137 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.
தொடர்ந்து மனநல மருத்துவர் சிவசைலம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 32 பேருக்கு அடிப்படை மன உளவியல் குறித்தும், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள் குறித்தும், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம் (தென்பாகம்), பிரேம் ஆனந்த் (வடபாகம்), அய்யப்பன் (மத்தியபாகம்), தில்லைநாகராஜன் (முறப்பநாடு), மாரியம்மாள் (தூத்துக்குடி அனைத்து மகளிர்), மயிலேறும்பெருமாள் (போக்குவரத்து பிரிவு) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.