விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கோவில் கட்ட இடம் வழங்கக்கோரி, விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கினர்.

Update: 2023-03-06 20:11 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கோவில் கட்ட இடம் வழங்கக்கோரி, விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கினர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார், சங்கரநாராயணன் ஆகியோர் 3 அடி உயர விநாயகர் சிலையை சுமந்தவாறு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், ''நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் அம்பேத்கர் சிலை அருகில் கல்யாண விநாயகர், பாக்கிய விநாயகர் என்ற 2 விநாயகர் கோவில்கள் இருந்தது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையினரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் சந்திப்பு பஸ்நிலையம் புதிதாக கட்டப்பட்டபோது, அங்கிருந்த கோவில் அகற்றப்பட்டு, கோவில் கட்ட தேவையான இடம் வழங்கப்படும் என்று அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். ஆனால் தற்போது பஸ்நிலைய கட்டுமான பணிகள் குறிப்பிட்ட அளவில் முடிவடைந்த நிலையில் கோவிலுக்கான நிலம் வழங்கப்படவில்லை. எனவே அங்கு கோவில் கட்ட உடனடியாக நிலம் வழங்க வேண்டும். இடிக்கப்பட்ட கோவில்களில் உள்ள விநாயகருக்கு முறையாக பூஜை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.

சுடுகாட்டு பாதை

நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் பொதுமக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

அதில், ''பாளையங்கோட்டை யூனியன் ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு வேப்பன்குளம் கிராமத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு செல்லும் நடைபாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் மாற்று சமுதாயத்தினருக்கு சொந்தமான சுடுகாடு வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஒரு வருடமாக மனு அளித்து வருகிறேன். ஆனால் பலனில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில், எங்கள் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது உடலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று கூறியுள்ளனர்.

மூதாட்டி

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி சொரிமுத்து (வயது 83) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனது மகன் தன்னை பராமரிக்காமல், தனக்கு வரக்கூடிய பென்ஷன் பணத்தையும் எடுத்து சென்று விடுகிறான் என்று கூறி மனு கொடுத்தார்.

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க அரசு நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இதேபோன்று இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்