30 படுக்கை வசதிகளுடன் செல்வபுரம் நகர்நல மையம் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் -மாநகராட்சி ஆணையாளர் தகவல்

செல்வபுரம் நகர்நல மையத்தை 30 படுக்கைகளுடன் மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால் அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-07-12 16:20 GMT


செல்வபுரம் நகர்நல மையத்தை 30 படுக்கைகளுடன் மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால் அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 4 மற்றும் 10-க்கு உட்பட்ட சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள தூய்மை பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களிடம் குப்பை தரம் பிரித்து வாங்க வேண்டும், முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடு, புகார் பதிவேடு மற்றும் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் சரவணம்பட்டியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம்பிரித்து வாங்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு இருந்த பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்கு உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரின் தரம் மற்றும் வினியோகிக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு

தொடர்ந்து மேற்கு மண்டலம் வார்டு எண் 13-க்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புடன் ரூ.2.5 கோடியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளின் செயல்பாடுகளான இணையவழியில் குடிநீர் வினியோகம் செய்வதை கண்காணித்தல் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மத்திய மண்டலம் 69-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி பார்க் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மீனாட்சி மிஷன் நகர்நல மையம், செல்வபுரம் சாலையில் உள்ள மாநகராட்சி நகர்நல மையத்தை அவர் நேரில் ஆய்வு செய்தார். செல்வபுரம் நகர்நல மையத்தில் ரூ.68 லட்சத்தில் ஆண், பெண்கள் என தனி வார்டுகளில் 30 படுக்கை வசதி, ரத்த வங்கி, ஸ்கேன் அறை போன்ற வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான கூடுதல் கட்டுமான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்தார். எனவே அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகர்நல அதிகாரி பிரதீப் கிருஷ்ணகுமார், மாநகராட்சி பொறியாளர் (பொறுப்பு) அரசு, உதவி ஆணையாளர்கள் சங்கர், மோகனசுந்தரி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், கணேசன், ராஜேஷ் வேணுகோபால், மண்டல சுகாதார அதிகாரிகள் ராமு, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்