மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது

புதுக்கோட்டை அருேக விபூதி போட்டு வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறி மாணவியை பலாத்காரம் செய்ததோடு, இதனை வெளியே யாரிடமும் கூறினால் சாமி குற்றமாகிவிடும் என்று மிரட்டிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-10 18:17 GMT

கீரனூர்:

மந்திரவாதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனி என்கிற சின்ன பூசாரி (வயது 65). மந்திரவாதியான இவர், தனது வீட்டின் மாடியில் உள்ள பூஜை அறையில் வைத்து தன்னிடம் வருபவர்களுக்கு குறி சொல்வதும், யாருக்காவது நீண்ட நாள் வியாதி, பில்லி சூனிய பாதிப்பு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மந்திரித்து விபூதி போடுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதன் மூலம் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளனர். அப்போதும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மந்திரவாதி பழனியிடம் அழைத்து செல்லுங்கள், அவர் மந்திரித்து விபூதி போட்டால் வயிற்று வலி குணமாகிவிடும் என்று பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் மந்திரவாதி பழனியிடம், மாணவியை அழைத்து சென்றுள்ளனர்.

பலாத்காரம்

அப்போது பழனி, மாணவிக்கு மந்திரித்து விபூதி போடவேண்டும் என்று மாணவியின் பெற்றோரை வீட்டிற்கு வெளியே இருக்குமாறு கூறினார். பின்னர் மாணவியை மட்டும் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து மாணவிக்கு மந்திரித்து விபூதி போட்டுள்ளார். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மாணவியிடம் இதை வெளியே சொன்னால் சாமி குற்றமாகி விடும். இதனால் இதனை வெளிேய யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் தங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மேலும் மந்திரவாதி கூறியதை நம்பி மாணவி தனக்கு நடந்ததை தன் தாயிடம் கூட இதுபற்றி கூறாமல் இருந்து வந்தார்.

கைது

இந்த நிலையில் அந்த மாணவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு உடலில் மாற்றம் தெரிந்ததால் பயத்தில் தனது தாயிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பழனியை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் கீரனூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிக்கு விபூதி போடுவதாக அழைத்து சென்று மந்திரவாதி பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்