விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-07-09 18:30 GMT

ஆரம்ப சுகாதார நிலையம்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே விளாங்குடி ஊராட்சியில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு விளாங்குடி, கொலையனூர், நாச்சியார்பேட்டை, வி.கைகாட்டி, தேளூர், ரெட்டிப்பாளையம், பெரியநாகலூர், நாயக்கர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்காக வந்து செல்கிறார்கள். மேலும் விபத்தில் படுகாயம் அடையும் நபர்களுக்கு இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரியலூர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிமெண்டு மேற்கூரைகள்

விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்தும், மேற்கூரைகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கும் அறை, உள் நோயாளிகள் அறை, மருந்தகம் உள்ளிட்ட அனைத்து அறைகளின் சிமெண்டு மேற்கூரைகள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் கசிந்து மருந்து, மாத்திரைகள் வீணாவதோடு நோயாளிகளும் நனைந்து சிரமம் அடைந்து வருகிறார்கள்.

எனவே விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

தரம் உயர்த்த கோரிக்கை

காத்தான்குடிகாடு பகுதியை சேர்ந்த சங்கர்:- விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பல்வேறு பரிசோதனைக்காக இங்கு வந்து செல்கிறார்கள். வி.கைகாட்டி பகுதியில் சிமெண்டு ஆலை மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அதிகளவில் இருப்பதால் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. இதில் படுகாயம் அடையும் நபர்கள் சிகிச்சைக்காக விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நாடுகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

விளாங்குடி கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி:- திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நின்று செல்வதில்லை. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பெண்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே போக்குவரத்து அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ்களை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிதிலமடைந்த கட்டிடங்களை சீரமைப்பதோடு, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருந்து, மாத்திரைகள் வீணாகிறது

விளாங்குடியை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற தியகராஜன்:- அரியலூருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின் போது விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மனு அளித்திருந்தோம். இந்த மனுவை பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தகம், பிரசவம் பார்க்கும் அறை, உள் நோயாளிகள் அறைகளின் மேற்கூரை சேதமடைந்து அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகளும், டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும், மேற்கூரையின் வழியாக மழைநீர் கசிந்து மருந்து, மாத்திரைகள் வீணாவதோடு நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோயாளிகள் அவதி

அய்கால் கிராமத்தை சேர்ந்த செம்மலை:- விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேலும் இங்குள்ள கழிவறை போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கான கழிவறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. எனவே இங்கு துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்