புதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வாரப்படுமா?

புதர்மண்டி கிடக்கும் வண்ணான் ஏரி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-06-27 20:41 GMT

தா.பழூர்:

வண்ணான் ஏரி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் சிந்தாமணி ஊராட்சியில் உள்ளது வண்ணான் ஏரி. இந்த ஏரி சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்ததாக இருந்தபோதும், ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து தா.பழூர் நகருக்குள் வருபவர்கள், முகப்பு பகுதியை ஒட்டி இருக்கும் வண்ணான் ஏரியை பார்க்காமல் வர முடியாது. ஒரு காலத்தில் இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இதனால் கடல்போல் காட்சியளித்தது.

தா.பழூர், சிந்தாமணி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை பராமரிப்பதற்கும் இந்த ஏரியை பயன்படுத்தி வந்தனர். இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்ததால் இந்த ஏரியை சுற்றி இருக்கக்கூடிய பகுதி எப்போதுமே பசுமையான சூழ்நிலையிலேயே இருந்தது. இந்த ஏரியின் அருகில் இருக்கும் எமநேரியில் தண்ணீர் நிறைந்து, அதில் இருந்து வெளியேறும் தண்ணீரும், சுற்றுப்புறங்களில் இருக்கக்கூடிய வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரும் வண்ணான் ஏரியை முழுமையாக நிரப்பி விடும்.

புதர்மண்டி கிடக்கிறது

ஆனால் பின்னர் படிப்படியாக இந்த ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால், இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் காலப்போக்கில் தண்ணீர் நிரம்பாமல் வண்ணான் ஏரியில் கருவேல மரங்களும், பல்வேறு செடிகளும் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த ஏரி சிறிது சிறிதாக சுற்றுப்புறங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பொலிவிழந்து போன வண்ணான் ஏரி தூர்வாரப்பட்டு, தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பம் ஆகும். இதன் மூலம் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வண்ணான் ஏரி புதர் மண்டி கிடப்பதால் தா.பழூர் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள கோழி, மீன், பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொண்டு வரப்பட்டு, இந்த ஏரிக்குள் கொட்டப்படுகிறது. இறைச்சி கழிவுகளை உண்பதற்காக ஏரிக்குள் பன்றிகள் மேய்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

துர்நாற்றத்தால் அவதி

வண்ணான் ஏரியின் அருகில் அரியலூர் மார்க்கத்தில் செல்லும் பஸ் நிறுத்தம், ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் செல்லும் பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த ஏரியில் இருந்து வீசும் துர்நாற்றம் மிகுந்த அவதியை ஏற்படுத்துகிறது. அதேபோல் வண்ணான் ஏரியின் கிழக்கு கரை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் சுமார் 100 மாணவிகள் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஏரியில் துர்நாற்றம் வீசுவதால், அந்த மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த ஏரியில் புதர்களை அழித்து, முழுமையாக தூர்வாரி வரத்து வாய்க்கால்களை புனரமைத்து ஏரியின் நீர் ஆதாரத்தை பெருக்கி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. மீண்டும் அந்த ஏரி கடல் போல் காட்சி அளிப்பதை காண்பதற்கு ஆவலாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தூர்வார வேண்டும்

வண்ணான் ஏரிக்கரையில் மளிகைக்கடை நடத்தி வரும் மோகன்:- எங்களுக்கு சிறுவயதாக இருக்கும் போது, இந்த ஏரியில் குளித்து விளையாடி மகிழ்ந்தோம். எப்போதுமே தண்ணீர் வற்றாமல் வளமான ஏரியாக இருந்து வந்தது. இந்த ஏரிக்கான நீர் வரத்து எப்படி படிப்படியாக குறைந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இப்போதைய காலங்களில் இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை. இப்படி புதர்மண்டி கிடக்கும் ஏரியை பார்க்கும்போது எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல நீர் நிலைகளை விட்டுச்செல்ல முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் ஏரிகள். குளங்கள் காணாமல் போய் இருக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில் நீர் ஆதாரம் ஏரிகளே. அவற்றை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டியது நமது கடமை. எனவே ஏரியை தூர்வாரி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

இறைச்சிக் கழிவுகள்

ஆட்டோ டிரைவர் ரமேஷ்:- வண்ணான் ஏரியில் புதர் மண்டி கிடப்பதால், அருகில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளில் இருந்தும் இறைச்சிக் கழிவுகள் இந்த ஏரியின் கரையோர பகுதியிலேயே கொட்டப்படுகிறது. அந்த கழிவுகளை சாப்பிடுவதற்கு பன்றிகள், அப்பகுதியில் மேய்ந்து வருகிறது. இதனால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்குகிறது. ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ நிறுத்தும் இடமாக வண்ணான் ஏரிக்கரையை அதிகாரிகள் ஒதுக்கி தந்திருக்கிறார்கள். நாங்கள் காலையில் அந்த ஏரிக்கரைக்கு ஆட்டோவில் வந்து விட்டால், சவாரிக்கு ெசல்லும் நேரம் தவிர, மீண்டும் இரவு வீட்டிற்கு செல்லும் வரை இதே துர்நாற்றத்தில் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எனவே எங்களுக்கு நோய்கள் ஏற்படுமோ? என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த ஏரியை உடனடியாக தூர்வாரி, அங்கு கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள், செடிகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

பூங்கா அமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர் ஜெகன்:- பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக காலையில் பஸ் மூலமாக வந்து இறங்குவதற்கும், மீண்டும் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்கும் வண்ணான் ஏரிக்கரையில் இருக்கும் பஸ் நிறுத்தங்களையே பயன்படுத்தி வருகின்றனர். பஸ்சுக்காக இந்த பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் மாணவ, மாணவிகள் வண்ணான் ஏரியில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். வளர்ந்து வரும் நவீன காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு போதிய நோய் எதிர்ப்பாற்றல் இல்லாத சூழ்நிலையில், கடுமையான நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் வண்ணான் ஏரியில் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுவதற்கு, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தடை விதிக்க வேண்டும். மேலும் ஏரி புனரமைக்கப்பட்டு ஏரியை சுற்றி கரை அமைக்கப்பட்டு, அதில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக பூங்கா அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்