3 பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
3 பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையின் இடையே தோட்டச்சேரி கிராமம் உள்ளது. இங்கு கொரடாச்சேரி சாலை, லெட்சுமாங்குடி சாலை, தோட்டச்சேரி செல்லும் சாலை என 3 பிரிவு சாலைகள் செல்கின்றன. லெட்சுமாங்குடி மற்றும் கொரடாச்சேரி செல்லும் சாலை வழியாக திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல், கும்பகோணம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும். தோட்டச்சேரி சாலையிலும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கடைவீதி, ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் தோட்டச்சேரி சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தோட்டச்சேரி மைய பகுதியில் உள்ள 3 பிரிவு சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கமாக உள்ளது. மேலும் இங்கு அடுத்தடுத்து ஆபத்தான வளைவுகள் உள்ளன. அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியாகவும் இந்த பகுதி உள்ளது. எனவே தோட்டச்சேரி 3 பிரிவு சாலையில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.