ஊட்டியில் திரைப்பட நகரம் அமையுமா?

பூங்காக்கள், இயற்கை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் திரைப்பட நகரம் அமையுமா? என தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-10-03 18:45 GMT

ஊட்டி, 

பூங்காக்கள், இயற்கை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் திரைப்பட நகரம் அமையுமா? என தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இயற்கை எழில்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் பசுமை நிறைந்தும், இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. தென்னிந்திய அளவில் சினிமா படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக உள்ளது. ஊட்டி, குன்னூர் பகுதிகளில் வெளிநாடுகளில் நிலவும் காலநிலையும், கோத்தகிரியில் சுவிட்சர்லாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண காலநிலையும் நிலவுகிறது. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். நடித்த வேட்டைக்காரன், கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த பல படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான அன்பே வா, வசந்தமாளிகை, ஊட்டி வரை உறவு, சங்கமம், இதயக்கனி, நல்ல நேரம், சிவகாமியின் செல்வன் படங்கள், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் சூட்டிங்மட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு உள்ளன.

திரைப்பட நகரம்

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் சினிமா எடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் வாடகை வாகனங்கள், ஓட்டல்கள், சினிமா தொழில் உதவியாளர்கள் என பலர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். மேலும் முன்னணி நடிகர்கள் குன்னூர், கோத்தகிரியில் பங்களாக்கள் கட்டி, சீசன் நேரங்களில் வந்து தங்குகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஊட்டியில் திரைப்பட நகரம் உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன்:-

ஊட்டியில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊட்டி வரும் போது, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது அதற்கான இடம் தேர்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்.) தொழிற்சாலையை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான காலியிடம் தேர்வு செய்யப்பட்டது.

அனுமதியை எளிமையாக்க வேண்டும்

ஆனால், திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் திரைப்படங்கள் எடுப்பதற்காக இயற்கையான மலை காடுகள், புல்வெளிகள் உள்ளது. ஆனால், தற்போது திரைப்படங்கள் வெளிநாடுகளில் படமாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் தயாரிப்பு செலவு பல மடங்கு ஆகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் திரைப்படம் எடுப்பது குறைந்துள்ளது. இதற்கு காரணம் திரைப்படம் எடுக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பல மடங்கு உயர்ந்ததே ஆகும். மேலும் வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதும், அரசு துறைகளில் அனுமதி பெறுவதிலும் சிக்கல் உள்ளது. இந்த நடைமுறையை அரசு எளிமையாக்க வேண்டும்.

இயக்குனர்கள் உருவாக வாய்ப்பு

குறும்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராஜன்:-

நீலகிரியில் 300-க்கும் மேற்ப்பட்ட குறும்பட தயாரிப்பாளர்கள் உள்ளனர். குறும்படங்கள் எடுத்த பின்பு, அதற்கான இசை சேர்ப்பு, டப்பிங், ரீ ரெகார்டிங், எடிட்டிங் உள்பட அனைத்து வேலைகளுக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால், பலர் குறும்படங்கள் எடுக்க முன்வருவதில்லை. இதனால் வளரும் கலைஞர்கள் பலர் தாங்கள் விரும்பிய தொழிலை செய்ய முடியாத நிலை உள்ளது. ஊட்டியில் திரைப்பட நகரம் அல்லது மையம் அமைந்தால் பல இயக்குனர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

இயற்கை காட்சிகள்

விளம்பர பட இயக்குனர் சாந்த குமார்:-

ஊட்டியில் திரைப்பட நகரம் அமைந்தால், திரைப்படம் சார்ந்த இளைஞர்கள் ஆயிரக்கணக் னோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். சில நிறுவனங்களின் விளம்பர படங்கள் நீலகிரி மாவட்ட தேயிலை தோட்டங்கள் மற்றும் சில வனப்பகுதிகளிலும் எடுக்கப்பட்டு, நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை சார்ந்த பல முக்கிய நிறுவனங்களின் விளம்பரதாரர்கள், நீலகிரியில் தங்களது விளம்பர படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது. எனவே, ஊட்டியில் திரைப்பட நகரம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் படப்பிடிப்பு

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரவி:-

ஊட்டியில் திரைப்பட நகரம் அல்லது ஸ்டுடியோ அமைந்தால் நீலகிரி மாவட்டம், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோட்டை சார்ந்த பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பல திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தெங்குமரஹாடா, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் இயற்கை காட்சியுள்ள பகுதிகளிலும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

தற்போது தமிழகத்தில் இயற்கை எழில் மிகுந்த இடங்களை விட்டு விட்டு, வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. ஊட்டியில் திரைப்பட நகரம் அமைந்தால், அதிக செலவுகள் இன்றி சிறந்த படங்களை எடுக்க முடியும். 

Tags:    

மேலும் செய்திகள்