தேனி வாரச்சந்தை புத்துயிர் பெறுமா? வியாபாரிகள் எதிர்பார்ப்பு

தேனிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள வாரச்சந்தை மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, இதற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-11-12 18:45 GMT

தேனியின் அடையாளம்

தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள வாரச்சந்தை என்பது நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது. இந்த நகருக்கு தேனி என்று பெயர் வர இந்த வாரச்சந்தையே காரணம் என்று மக்கள் பெருமிதமாக கூறுகிறார்கள். தேனீக்கள் பூக்களில் தேன் எடுத்துவிட்டு தேன் கூட்டிற்கு வந்து கூடுவது போல், பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் இடமாகவும், மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் இடமாகவும் அமைந்த இந்த இடத்திற்கு தேனீ என்று பெயர் வந்ததாகவும், பிற்காலத்தில் அது மருவி தேனி என்று நிலைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த இந்த வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி மளிகை பொருட்கள், கத்தி, அரிவாள், மண்வெட்டி, கடப்பாரை உள்பட வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பொருட்கள், கருவாடு, நாட்டுக்கோழி உள்பட பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

பல ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை சந்தை நடந்து வந்தது. பின்னர் சந்தை நடக்கும் நாள் மாற்றப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக சனிக்கிழமை தோறும் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை மாவட்ட பகுதிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வந்து காய்கறிகள், பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

அடிப்படை வசதிகள்

வாரச்சந்தை நடைபெறும் நாளில் தேனி-பெரியகுளம் சாலையில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படும். தேனி நகரில் முக்கியமான இடத்தில் முதலிடம் பிடிப்பது வாரச்சந்தை தான். சந்தை நடக்கும் நாளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் இங்கு வந்து செல்வார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை. சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது. இங்கு வந்து செல்லும் மக்களுக்கு குடிநீர் வசதி, போதிய கழிப்பிட வசதி கிடையாது. வாரச்சந்தை வளாகத்திற்கும் போதிய அளவில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவது இல்லை. குப்பைகளால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு அதிகரித்து வருகிறது.

குளமாகிய சந்தை

இந்த வாரச்சந்தையில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்திலும் தற்காலிக மேற்கூரை அமைத்து தான் வியாபாரம் நடக்கிறது. சனிக்கிழமை நடக்கும் வாரச்சந்தைக்காக வெள்ளிக்கிழமையே கடைகள் அமைக்கப்படுகின்றன. பின்னர் சனிக்கிழமை இரவில் மேற்கூரைகள் பிரிக்கப்படும். காலம் காலமாக இந்த நடைமுறைதான் உள்ளது. இதனால் ஒவ்வொரு வாரமும் தற்காலிக மேற்கூரை அமைக்கவும், பிரிக்கவும் நேரம், பணம் செலவிட வேண்டிய நிலைமை உள்ளது.

எனவே வாரச்சந்தையில் நிரந்தர கடைகள் அமைக்க வேண்டும் என்பது வியாபாரிகள், பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. தற்போதைய நிலைமையில் ஒரு மணி நேர மழைக்கே வாரச்சந்தை வளாகம் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. சேற்றில் தான் காய்கறி கடைகள் அமைக்கும் அவலம் உள்ளது. இதனால் இங்கு வந்து செல்லும் வியாபாரிகளும் மக்களும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நேற்று தேனியில் மழை பெய்தபோது வாரச்சந்தையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. செடிகளில் இருந்து பறித்து நல்ல தண்ணீரில் கழுவி ஆசை ஆசையாக விற்பனைக்கு கொண்டு வந்த காய்கறிகளை சேற்றில் வைத்து விற்பனை செய்யும் அவல நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.

இந்த வாரச்சந்தைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்

சதீசன் (தேனி வாரச்சந்தை காய்கறி வியாபாரி) :- ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. காய்கறிகளை சேற்றுக்குள் வைத்து விற்பனை செய்யும் நிலை ஏற்படுகிறது. மக்கள் வருகையும் குறைகிறது. இதனால் காய்கறிகளை வாகனங்களில் எடுத்து வந்ததற்கான வாடகைக்கு கூட வியாபாரம் நடக்காமல் நஷ்டப்படுகிறோம். வாரச்சந்தையை நவீனமயமாக்க வேண்டும். சேறும் சகதியுமாக மாறுவதை தவிர்க்க சிமெண்டு தளம் அமைக்க வேண்டும்.

மூக்கன் (தேனி வாரச்சந்தை காய்கறி வியாபாரி) :- நான் 20 ஆண்டுகளுக்கும் மேல் வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறேன். இங்கு மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால், மழைநீர் குளம்போல் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு வியாபாரிகள் அமரும் இடம், மக்கள் நடமாடும் இடங்களில் சிமெண்டு தளம் அமைத்துக் கொடுத்தால் மழை பெய்தாலும் வியாபாரிகளுக்கு பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படாது. விற்பனையாகாமல் பாதிப்பு ஒருபுறம் என்றால், மழைநீரில் மூழ்கி காய்கறிகள் வீணாவது மற்றொருபுறம் என பாதிக்கப்படுகிறோம். இங்கு குடிநீர், போதிய கழிப்பிட வசதி போன்றவையும் இல்லை. அவற்றையும் செய்து கொடுக்க வேண்டும்.

சிறப்பு நிதி

கண்ணன் (தேனி வாரச்சந்தை பழ வியாபாரி) :- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டது. இதனால், கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். அதை சனிக்கிழமை என்று மாற்றியதால் கேரள வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. மக்கள் வருகையும் குறைந்து விட்டது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை என்று மாற்றினால் வியாபாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பழமையான இந்த சந்தையை மேம்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்