தாமிரபரணி கூடுதல் கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

விருதுநகர் நகராட்சி பகுதிக்கான தாமிரபரணி கூடுதல் கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 20:07 GMT


விருதுநகர் நகராட்சி பகுதிக்கான தாமிரபரணி கூடுதல் கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவைக்கு ஆனைக்குட்டம், ஒண்டிப்புலி, காருசேரி, கோடைகால குடிநீர் தேக்கம் போன்ற நிலத்தடி நீர் ஆதாரங்கள் கை கொடுத்து வந்தன.

இந்தநிலையில் இந்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டு்விட்ட நிலையிலும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினசரி 25 லட்சம் முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. நகரின் குடிநீர் தேவைக்கு தினசரி ஒட்டுமொத்தமாக 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனால் மொத்த தேவை 65 லட்சம் லிட்டர் ஆகும். இதனால் நகராட்சி நிர்வாகம் நகரில் குடிநீர் வினியோக இடைவெளிநாட்களை குறைக்க முடியாமல் திணறுகிறது. மேலும் குடிநீர் வினியோக மண்டலங்களை குறைத்தால் தான் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்கமுடியுமென தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் வினியோக மண்டலங்களை குறைக்க நடவடிக்கை எடுத்த பாடில்லை.

பணிகளில் தொய்வு

ரூ. 444 கோடி மதிப்பீட்டில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் கூடுதல் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டு திட்டம் பயன்பாட்டிற்கு வர மேலும் தாமதமாகும் நிலை உள்ளது. இத்திட்ட பணி கடந்த மார்ச் மாதமே முடிவடையும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் தற்போதைய மாத இறுதியில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலையில் 60 சதவீத பணிகள் கூட முடிவடையாதநிலையில் திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி கூற முடியாத நிலை உள்ளது.

தாமதம்

விருதுநகர் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்திற்கு கூடுதல் தாமிரபரணிகூட்டு குடிநீர் திட்டம் அவசியம் தேவை என்ற நிலை இருந்தும் திட்டப்பணி தாமதப்படுத்தப்படுகிறது.

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த போதிலும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்து அதனை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்த வேண்டுமெனகோரப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்