சேலம் லாரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளசாலை புத்துயிர் பெற்று பயன்பாட்டுக்கு வருமா?வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம் லாரி மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ள சாலை புத்துயிர் பெற்று பயன்பாட்டுக்கு வருமா? என்று வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-12-29 21:12 GMT

சேலம், 

சாக்கடை கழிவுநீர்

சேலம் லாரி மார்க்கெட் பகுதியில் எப்போதும் கனரக, இலகுரக வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதே போன்று வியாபாரிகள், பொதுமக்கள் நடமாட்டமும் இரவு 11 மணி வரை இருக்கும். மேலும் அங்கு பெட்டிக்கடை, டீக்கடை, மளிகை கடை என ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லாரி மார்க்கெட்டில் இருந்து லீ பஜார் வர்த்தக மைய கட்டிடம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் சேலம்-விருத்தாசலம் ரெயில் தண்டவாளம் உள்ளது.

மேம்பாலத்தின் அடியில் 2 புறமும் இணைப்பு சாலைகள் பெரிய அளவில் உள்ளன. இதில் மேம்பாலத்தின் ஒரு பக்கம் உள்ள சாலை முழுவதும் சாக்கடை கழிவுநீர், மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மறு புற சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மேம்பாலத்தின் அடியில் உள்ள இணைப்பு சாலைகள் இரண்டிலும் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியவில்லை.

சிரமம்

லாரி மார்க்கெட் மற்றும் அதை சுற்றி உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் லீ பஜார், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடை கழிவுநீரால் சூழப்பட்டு போக்குவரத்து நடைபெறாமல் உள்ள சாலைைய சீரமைத்து, புத்துயிர் அளித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

வியாபாரி மார்க்கபந்து:-

லாரி மார்கெட் பகுதியில் மேம்பாலத்தின் அடியில் உள்ள இணைப்பு சாலையில் கடந்த 1 ஆண்டுக்கு மேல் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதோடு மழை நீரும் தேங்கி கிடக்கிறது. காலை முதல் இரவு வரை எப்போதும் வாகன போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்த இந்த மெயின் ரோடு தற்போது போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கழிவுநீரில் விழுந்து 3 பேர் பலியாகி உள்ளனர். எனவே சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனுக்களாக கொடுத்தோம். நேரிலும் சந்தித்து பேசினோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே சாக்கடை கழிவு நீரை அகற்றி விரைவில் சாலையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

சட்ட விரோத சம்பவங்கள்

டீக்கடை நடத்தி வரும் சதீஷ்:-

லாரி மார்க்கெட் மேம்பாலத்தின் அடியில் உள்ள மெயின்ரோடு பகுதியில் போக்குவரத்து இல்லாததால் இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்டவாளத்தின் அடியில் 50 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண் நடந்து வந்து கொண்டிந்தார். மர்ம நபர்கள் அந்த பெண்ணை கடத்தி கற்பழிக்கும் நோக்கில் அருகே சென்றனர். அவர்களை பார்த்து அந்த பெண் சத்தம்போட்டபடி கடைகள் உள்ள இடத்திற்கு ஓடி வந்தார். இதை பார்த்த மர்ம நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆட்கள் நடமாட்டம் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த பகுதி சமூக விரோத கூடாரமாக மாறி விட்டது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாம்பு, கொசுத்தொல்லைகள்

சாலையோர உணவகம் நடத்தி வரும் ராஜேஸ்வரி:-

சாக்கடை கழிவு நீரில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பல மாதங்கள் ஆகியதால் சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே உள்ளது. ஒரு சில நேரங்களில் மூச்சு விட முடியாத அளவில் துர்நாற்றம் வீசும். மேலும் பாம்புகள் மற்றும் கொசுத் தொல்லைகளும் உள்ளன. டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. சுத்தம், சுகாதாரம் என்று கூறினால் மட்டும் போதாது. அதிகாரிகளிடம் கூறினால், நடவடிக்கை எடுப்பது இல்லை. இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வேலை முடிந்து தனியாக வரும் பெண்களிடம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. சமூக விரோத செயல்களும் நடக்கிறது. எனவே சாக்கடை கழிவு நீரை அகற்றி மெயின் ரோட்டில் மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

புத்துயிர் அளிக்க வேண்டும்

வண்டி இழுக்கும் தொழிலாளி ஜானிபாஷா:-

வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து லாரி மார்க்கெட்டுக்கு வரும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வண்டிகளில் ஏற்றி கையில் இழுத்துக்கொண்டு பல்வேறு கடைகளுக்கு கொடுத்து வருகிறேன். முன்பெல்லாம் பாலத்தின் இணைப்பு சாலை வழியாக சிரமம் இன்றி சுமைகளை வண்டிகளில் ஏற்றி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு டெலிவரி கொடுத்து வந்தேன்.

தற்போது சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் மேம்பாலத்தின் வழியாகத்தான் வண்டியை இழுத்து செல்கிறோம். சில நேரங்களில் பால்மார்க்கெட் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் சுமையுடன் வண்டியை இழுத்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைத்து புத்துயிர் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?

சாக்கடை கழிவுநீர் சூழ்ந்துள்ள மெயின் ரோடு ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் உள்ளதால் அதை ரெயில்வே நிர்வாகம் தான் சீரமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், நெடுஞ்சாலைத்துறை தான் பராமரிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். எது எப்படியோ எப்போதும் பரபரப்பாக வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிந்த சாலை தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டது போல் உள்ளது. எனவே சாக்கடை கழிவு நீரை அகற்றினால் அந்த பகுதி மக்கள் மிகவும் பயன்அடைவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்