ஆக்கிரமிப்புகளால் காணாமல் போவதற்கு முன் குளம் மீட்கப்படுமா?
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போவதற்கு முன் குளத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வண்ணான் குளம் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காகவும் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் வெட்டப்பட்டது. கீழ்பெரும்பாக்கம் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள காகுப்பம், எருமனந்தாங்கல், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் விளங்கியதோடு விழுப்புரம் நகருக்கு செல்லக்கூடிய வழியில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கும் நீர்ஆதாரமாக இருந்தது. இந்த நிலையில் காலப்போக்கில் வீடுகள் பெருகியதோடு சிறிது, சிறிதாக ஆக்கிரமிப்புகள் உருவாகியதன் விளைவாக 1¼ ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த குளம் ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. தற்போது ஒரு ஏக்கருக்கும் குறைவான அளவிலேயே குளம் இருக்கிறது.
கழிவுநீர் கலப்பு
இந்த குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவாக இந்த குளத்தில் கழிவுநீர் கலந்ததால் குளத்து நீர் மாசடைந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்த குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் கழிவுநீர் குளமாகவே மாறிவிட்டது. அதுபோல் குளத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியது.
இக்குளத்தில் தண்ணீர் நிரம்பி அங்கிருந்து வடிகால் வாய்க்கால் மூலமாக எருமனந்தாங்கல் ஏரிக்கு செல்லும். இதற்காக 40 அடி அகலத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அந்த வாய்க்காலும் பல இடங்களில் தூர்ந்துபோயுள்ளது. ஒரு சில இடங்களில் தனிநபர்களின் ஆக்கிரமிப்புகளால் தற்போது அந்த வாய்க்கால் 4 அடி அகலத்தில்தான் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் குளம் தற்போது மக்களுக்கு பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது.
இந்த குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பாக வடிகால் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதோடு ஆக்கிரமிப்புகளினால் தூர்ந்துகிடக்கும் வாய்க்காலையும் சீரமைக்க வேண்டும். காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போவதற்கு முன் இக் குளத்தை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கொசுத்தொல்லை
விழுப்புரம் சர்வேசன் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி கூறும்போது இங்குள்ள குளத்தை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நகராட்சி ஊழியர்கள் வந்து குளத்தை சுற்றிலும் இருந்த முட்புதர்களை வெட்டி அகற்றியதோடு, குப்பைகளையும் அப்புறப்படுத்தினர். அதோடு சரி, அதன் பிறகு யாரும் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குளத்தை தூர்வாரி சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த குளத்தின் அருகே உள்ள வடிகால் வாய்க்கால் அடைப்பையும் சரிசெய்யாமல் சென்று விட்டனர். இதனால் அந்த வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. எனவே மழைக்காலத்திற்குள் இந்த வாய்க்காலை சரிசெய்துவிட்டு குளத்தையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றார்.
அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோவில் குருசாமி பாலு கூறுகையில், இங்குள்ள குளம் பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு நீர்ஆதாரமாக இருந்தது. முன்பெல்லாம் 70 அடியில் இருந்து 100 அடிக்குள் நிலத்தடி நீர் கிடைத்தது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. தற்போது 600 அடியில்தான் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்குள்ள குளத்தில் குப்பைகளை கொட்டி குப்பை கொட்டும் இடமாகவே மாற்றி விட்டனர். அதோடு ஆக்கிரமிப்புகளினால் குளமே சுருங்கி விட்டது. குளத்து நீர், ஏரிக்கு செல்வதற்கான வாய்க்கால் வசதியும் இல்லாததால் மழைக்காலங்களில், குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்குகிறது. எனவே மழைக்காலம் ெதாடங்குவதற்குள் இந்த குளத்தை தூர்வாரி சீரமைத்தால்தான் எதிர்வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.