அரசு பணி காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு பணி காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என போட்டித் தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-05-11 18:45 GMT

விரைந்து தேர்வு செய்ய வேண்டும்

அரசு வேலை என்பது, படிக்கும் காலத்தில் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த கனவை எட்டிப்பிடிப்பவர்கள் சில ஆயிரம்பேர் தான். இந்த கனவை நிறைவேற்றுவதற்கு வழி தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள் பலர் இருந்தனர்.

இந்த சூழலில் போட்டித் தேர்வுகளே அரசு வேலையை அடைவதற்கான வழி என்பதை இளைஞர்கள் உணரத் தொடங்கி உள்ளனர். இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

போட்டித் தேர்வு எழுதாத இளைஞர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேர்வை எழுதி வருகின்றனர். இதிலும் சிலர் வருடக்கணக்கில் இதற்காகவே பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு தேர்வும் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் தேர்வாக அமைகிறது. இதனால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விரைந்து பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

போட்டித் தேர்வர்களும் அதிகரிப்பு

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படாததால் 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்ப காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்பிறகு 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அதிகரித்து 10 ஆயிரத்து 117 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த போட்டி தேர்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.

15 ஆயிரமாக...

கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி படித்து முடித்தவர்கள் அதிகளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில், 2 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது. குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவ, மாணவிகளின் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகி போய்விடுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதனால் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என்றும் போட்டித் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போட்டித் தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மனச்சோர்வு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, ஒகளூரை சேர்ந்த சேதுபதி:- கொரோனா காலக்கட்டங்களில் பெரும்பாலான போட்டி தேர்வாளர்கள் மனச்சோர்வு அடைந்திருந்த நிலையில் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதே வேளையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித போட்டி தேர்வும் நடைபெறாத நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டிய நிலையில் மிகக் குறைவான காலிப்பணியிடங்களையே தற்போது டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வயதாகிவிடும் காரணத்தால் மனச்சோர்வு அடைகின்றனர். மேலும் 2022-ல் நடைபெற்ற சில தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும். தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதாலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் ஒரு விதமான குழப்ப நிலையில் உள்ளார்கள் என்பது பொதுவான கருத்து. அதனைத் தீர்த்து அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை அறிவித்து போட்டி தேர்வுக்கு தயாராகின்ற மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமாய் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை போன்று தேர்வுகள் நடத்திய குறிப்பிட்ட காலத்தில் முடிவுகளை வெளியிட்டாலே மாணவர்களிடம் இருக்கக்கூடிய மன உளைச்சல் நீங்கி அவர்கள் மிகுந்த தெளிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகுவார்கள்.

தேர்ச்சி பெற முடியுமா?

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் கோகுல்:- நான் தற்போது பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஒரு பட்டப்படிப்பு முடித்தால் ஏதேனும் அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து எழுதி தேர்ச்சி பெற்று அரசு வேலைக்கு சென்றிடலாம் என்ற எண்ணத்தில், தற்போதே அரசின் போட்டி தேர்வுகளுக்கு என்னை போன்று, சக மாணவர்களும் படிப்பதற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு அறிவிக்கும் போட்டி தேர்வுகளுக்கு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாகி இருக்கிறது. ஆனால் அந்த போட்டி தேர்வுகளை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சில மாணவர்கள் இந்த போட்டியில் தேர்ச்சி பெற முடியுமா? என்ற சந்தேகத்தில் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதை விட்டு விட்டு குறைந்த சம்பளத்துக்கு தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். எனவே தமிழக அரசு போட்டி தேர்வுகளுக்கு அதிக காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும்.

இலவச பயிற்சி வகுப்புகள்

ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூரை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர் பாலமுருகன்:- அரசு வேலையில் சேருவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான் போட்டித் தேர்வுக்காக படித்து வருகிறேன். பல போட்டி தேர்வுகளின் முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படுவதில்லை. இதனால் அந்த தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது தமிழக அரசு மத்திய-மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு போட்டி தேர்வுகளுக்கு அதிக காலிப்பணியிடங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்