விருதுநகர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?-தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் கடந்த 33 ஆண்டுகளாக முடங்கியுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் கடந்த 33 ஆண்டுகளாக முடங்கியுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம்
விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை என்ற காரணத்தை கூறி நகரின் தெற்கு பகுதியில் புதிய பஸ் நிலையத்திற்கு கடந்த 1988-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது. தொடக்க காலத்தில் இந்த பஸ் நிலையம் முழுமையாக செயல்படாத நிலையில் பஸ் நிலையத்தை செயல்படுத்த தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் அந்த பஸ் நிலையம் செயல்படாமல் தற்போது வரை முடங்கியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தின் செயல்பாடு தொடர்ந்து முடங்கியது.
மக்கள் அவதி
தற்போதும் கடந்த ஆண்டு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த பஸ் நிலையத்தை ஆய்வு செய்து இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்ட ஆய்வுக் கூட்டங்களை நடத்திய போதிலும் இதுவரை புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதில் அடிப்படை பிரச்சினை என்ன என்பதை மாவட்ட நிர்வாகமும் தெளிவாக வெளிப்படுத்த தயாராக இல்லை. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது விருதுநகர் வாழ் மக்கள் தான். நெடுந்தூர பஸ்கள் நகருக்குள் வந்து செல்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் விருதுநகர் மக்கள் குறிப்பாக பெண்கள் வெளியூரில் இருந்து வந்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை நீடிக்கிறது.
கோரிக்கை
எனவே தமிழக அரசு இப் பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை மேலும் தாமதிக்காமல் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது