புதிய பாலம் அமைக்கப்படுமா?

செட்டிக்குளம் ஏரியில் புதிய பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-29 18:47 GMT

சேந்தமங்கலம்

சாலை துண்டிப்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சியில் அமைந்துள்ளது செட்டிகுளம் ஏரி. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி நீரின் மூலம் அப்பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.

இந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக கொல்லிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள பெரிய ஆற்றின் வழியாக வந்த வெள்ளநீரால் ஏரி நிரம்பி வழிந்தது. மேலும் ஏரியின் அருகில் இருந்து செல்லும் தார்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஏரிபகுதி வழியாக சென்று வந்த சில கிராம மக்கள் தற்போது அந்த சாலை துண்டிக்கப்பட்டதால் அவ்வழியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையை சீரமைத்து பழைய பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சீமைகருவேல மரங்கள்

இது குறித்து சமூக ஆர்வலர் ஆனந்தகுமார் கூறியதாவது:-

கொல்லிமலையில் இருந்து ஓடிவரும் வெள்ளநீர் குண்டுமடுவு ஆற்று வழியாகவும், வெண்டாங்கியில் ஓடும் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்தும் தண்ணீர் வந்து செட்டிகுளம் ஏரியை நிரப்புகின்றது. இந்த நிலையில் அந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், குறைந்த அளவிலான தண்ணீரே அப்பகுதி நீர்வழி பாதையில் வருகிறது. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் ஏரியின் கிழக்கு புறத்தில் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் கிராவல் மண்ணை அள்ளிச் செல்வதால் வெட்டுக்குழியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மற்றொரு பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த அளவே செல்கிறது. எனவே ஏரியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரி முழுவதுமே சீமை கருவேல முட்செடிகள் அதிகளவில் முளைத்து காணப்படுகிறது. அவற்றை அகற்றினால் மேலும் கூடுதலாக ஏரியில் தண்ணீரை தேங்க செய்ய முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளின் மட்டும் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

மேலும் அந்த ஏரி பகுதியில் தற்போது ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால், அங்கு உட்கார்ந்து சில மதுபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை ஏரி நீரில் போட்டு செல்கின்றனர். இந்த நிலையில் அந்த ஏரி பகுதியில் பணிகள் தொடங்கும் போது, அந்த பாட்டில்கள் உடைபட்டு, தொழிலாளர்கள் கால்களில் காயத்தை உண்டாக்கும் அபாயம் உள்ளது. எனவே மதுபிரியர்கள் அங்கு வந்து செல்வதை தடுக்க வேண்டும்.

ஏரியை தூர்வார வேண்டும்

காந்திபுரத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம்:-

பொம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள சக்திநகர், ராயக்கோட்டை மற்றும் சில விவசாயிகள் காந்திபுரத்தில் இருந்தும் அந்த ஏரி வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது செட்டிகுளம் ஏரி அருகே இருந்த சாலை துண்டிக்கப்பட்டதால் அந்த வழியை பயன்படுத்தி வந்த அனைத்து தரப்பு மக்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

எனவே அங்குள்ள சாலையை சீர்படுத்தி ஏற்கனவே பழுதாகி காணப்படும் பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த ஏரியை தூர்வாரும் பணி நடந்து பல ஆண்டுகள் ஆவதால், அதனை தூர் வாருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பாலம் கட்ட நடவடிக்கை

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ராஜி கூறியதாவது;-

செட்டிகுளம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பாகவே அங்குள்ள பழுதான பழைய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதையில் தண்ணீர் வரத்து குறையாமல் இருப்பதால், அங்கு பணிகள் தொடங்க காலதாமதம் ஆகி வருகிறது. வெள்ளநீர் வடிந்த உடன் அங்கு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்