ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா?
வடகரை-தென்கரை இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திட்டச்சேரி:
வடகரை-தென்கரை இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இணைப்பு சாலை
திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடகரை-தென்கரை இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலை வழியே அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு திருமருகல், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை சேதம் அடைந்துள்ளது.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்து...
அதாவது அந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சேதமடைந்த சாலை வழியாக அப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி படுகின்றனர்.
மேலும் நடந்து செல்பவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் இந்த ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ள வடகரை-தென்கரை சாலையை சீரமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.