குப்பைகள் முழுமையாக அகற்றப்படுமா?
கொள்ளிடம் ஆற்றங்கரையில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஆற்றங்கரையில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பரவி கிடக்கும் குப்பைகள்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தன. கொள்ளிடம் ெரயில் பாலம் அருகே தொடர்ந்து கொட்டப்பட்டு வந்த குப்பைகள் அப்படியே படிப்படியாக மேடாகி மண்ணோடு மண்ணாக சேர்ந்துள்ளது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள், டயர், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்கள் மண்ணோடு சேர்ந்து ஆற்றின் கரையோரம் சுமார் 10 அடி உயரத்துக்கும் 50 அடி அகலத்துக்கும் பரவி உள்ளது.
அகற்ற கோரிக்கை
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம் ெரயில் பாலம் அருகே தொடர்ந்து குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து ஆற்றின் கரையோர கிராம மக்களும் நீர்வளத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தனர். இதன் பேரில் ஊராட்சி குப்பைகள் அந்த இடத்தில் கொட்டுவது நிறுத்தப்பட்டது. ஆனால் அதே இடத்தில் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக கொட்டிய குப்பைகள் அப்படியே மேடாக உள்ளது.
மக்காத குப்பைகள் தண்ணீருடன் சேர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் தண்ணீரையும் மாசுபடுத்துகிறது. மண்ணையும் மாசு படுத்தி வருகிறது. எனவே மண்ணுடன் சேர்ந்து கலந்து உள்ள இந்த மக்காத குப்பைகளை மண்ணுடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடம் தேர்வு செய்யவில்லை
இதுகுறித்து கொள்ளிடம் சமூக சேவகர் ராமபிரபு கூறியதாவது:- கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் கடைவீதி மையப்பகுதியாக இருந்து வருகிறது. இங்கு தினந்தோறும் காலை முதல் மாலை வரை பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கொள்ளிடம் கடைவீதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கொள்ளிடம் கடைவீதி பகுதிகளில் கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றன.
ஊராட்சி சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று சேகரிக்கப்பட்டு அந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரத்துக்காக உருவாக்கப்படுகிறது. பின்னர் அவைகளை விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்வதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குப்பைகளை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு கடந்த நான்கு மாத காலமாக இடம் தேர்வு செய்யப்படாமல் இருந்து வருகின்றது. இதனால் கொள்ளிடம் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றது என்றார்.
சுகாதார சீர்கேடு
தண்டேசநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி விக்னேஸ்வரன் கூறியதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தின் நுழைவு பகுதியாக கொள்ளிடம் அமைந்துள்ளது.கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பயணியர் விடுதி, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.இது சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது. கொள்ளிடம் பகுதியில் ஊராட்சி குப்பைகளை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சேகரித்து கொட்டுவதற்கு இதுவரை இடம் தேர்வு செய்யவில்லை. குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதன் மூலம் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கொள்ளிடம் பகுதியில் குப்பைகளை சேகரித்து ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.