ஏரி தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலத்தாம்பட்டி ஏரி தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-01-08 20:29 GMT

22-வது வார்டு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 22-வது வார்டில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, போடிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 2 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

சிவதாபுரம், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, காட்டூர், இந்திரா நகர், மலங்காட்டான் தெரு ஆகியவை முக்கிய பகுதியாகும். சிவதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளி கொலுசு பிரதான தொழிலாக விளங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடிசை தொழிலாக வெள்ளி கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.சி.செல்வராஜ் உள்ளார்.

சுகாதார சீர்கேடு

இந்த வார்டை பொறுத்தவரையில் சாக்கடை கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை பிரதான கோரிக்கையாக இருக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பும் பட்சத்தில் அதன் உபரிநீர் சிவதாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் தண்ணீர் தெருக்களில் தேங்கி நிற்பதை காணமுடியும். குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் பல நாட்கள் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரி தண்ணீர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் புகுந்து குளம்போல் தேங்கி காட்சியளித்தது. இதனால் மாணவ, மாணவிகள் சேறும், சகதியில் நடந்து சென்ற அவல நிலை ஏற்பட்டது. இதை தடுக்க பள்ளி மைதானத்தில் மண் கொட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு நடவடிக்கை இல்லை. எனவே, பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கூறுகிறார்கள். வார்டில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

ஓடை ஆக்கிரமிப்பு

போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ்:-

மெய்யந்தெரு பகுதியில் சுகாதார வளாகம் பழுதடைந்து உள்ளதால் அதை மக்கள் பயன்படுத்த முடியாது. எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். மேலும், கஞ்சமலையில் இருந்து வெளியேறும் மழைநீர் மெய்யந்தெருவில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. பல மாதங்களாக தண்ணீர் செல்ல வழியில்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள ராஜவாய்க்கால் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது.

எனவே, தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், மெய்யந்தெருவில் சாலையில் ஆங்காங்கே இறந்தவர்களின் உடலை புதைக்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்து வசதியுடன் தகன மேடை அமைத்து கொடுக்க வேண்டும்.

வீட்டில் வசிக்க முடியாத அவலம்

சிவதாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள்:-

இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படவில்லை. ஏதோ கடமைக்கு அமைத்துள்ளனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மழை பெய்தால் சாக்கடை கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறது. இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றால் எப்படி குடியிருக்க முடியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வருகிறோம். எனது மகன் என்னுடன் வீட்டில் வசிக்க முடியாது என்று கூறி வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டான். மழைநீருடன் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

புதிய ரேஷன் கடை

ஆண்டிப்பட்டியை சேர்ந்த சுப்ரமணி:-

எங்கள் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருந்தும், 30 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை இல்லை. இதனால் பொதுமக்கள் வெகு தொலையில் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் அவல நிலை உள்ளது. எனவே, புதிய ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பஜனை கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் சரியான சாக்கடை கழிவுநீர் வசதி இல்லை. ஆண்டிப்பட்டி சுடுகாட்டில் தகனமேடை அமைத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். ஆண்டிப்பட்டியில் இருந்து சிவதாபுரம் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

தண்ணீர் தொட்டி

மலங்காட்டான் தெரு அருந்ததியர் காலனியை சேர்ந்த இல்லத்தரசி குஞ்சம்மாள்:-

எங்களுக்கு பிரதான கோரிக்கை என்ன வென்றால் சேலத்தாம்பட்டி ஏரி தண்ணீர் வெளியேறினால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடும். இதனால் குழந்தைகளுடன் இரவு முழுவதும் அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. பெரிய அளவில் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிணற்றில் இருந்து தான் தண்ணீரை எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஏற்கனவே இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தும் பலன் இல்லாமல் உள்ளது. எனவே, அதை மேலும் ஆழப்படுத்தி தண்ணீர் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்