தைவானை விழுங்குமா 'டிராகன்'?

யார் பெரியவன்? - இந்த போட்டி மனப்பான்மை ஊர் பஞ்சாயத்தில் இருந்து உலக பஞ்சாயத்தான ஐ.நா.சபை வரை இருக்கத்தான் செய்கிறது.

Update: 2023-01-08 05:23 GMT

35 ஆண்டுகளுக்கு முன் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் எனப்படும் ரஷியா உடைந்து சிதறும் வரை சர்வதேச அரங்கில் அதற்கும் அமெரிக்காவுக்கும் இடையேதான் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதில் கடும் போட்டி நிலவியது. உக்ரைன், தஜிகிஸ்தான், பெலாரஸ் போன்ற பகுதிகள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனிநாடு ஆனதும், ரஷியா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

இந்த காலகட்டத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அபார வளர்ச்சி கண்டு இன்று உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக விளங்குகிறது. இதனால், ஒரு காலத்தில் அமெரிக்காவா? ரஷியாவா? என்று இருந்த களம் இப்போது அமெரிக்காவா? சீனாவா? என்று மாறி இருக்கிறது.

சீனாவின் ஆதிக்க போக்கு அண்டை நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது. தனது ராணுவ மற்றும் பொருளாதார பலத்தை காட்டி அண்டை நாடுகளை மிரட்டும் வேலையை நீண்ட காலமாக செய்து வருகிறது. இமாசலபிரதேச மாநிலத்தையொட்டி அமைந்துள்ள திபெத்தை தங்கள் பகுதி என்று கூறி சீனா அபகரித்துக்கொண்டதால், திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார்.

இந்தியாவின் லடாக் பகுதியையும் அபகரிக்க சீனா துடிக்கிறது. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு இந்திய-சீன படைகளுக்கு இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டதும், நமது கடும் எதிர்ப்பை தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமானதால், சீனா வாலை சுருட்டிக் கொண்டதும் தெரிந்ததே.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலபிரதேச மாநிலமும் தங்களுடையதுதான் என்று சீனா அடம்பிடிப்பதால் அங்கும் எல்லையில் அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் நிகழ்கின்றன.

அத்துடன் பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கும் இலங்கைக்கு உதவி செய்வதாக கூறி, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் குசும்பு வேலையிலும் ஈடுபட்டு இருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வளமிக்க அண்டை நாடான தைவானை கபளீகரம் செய்ய சீனா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.




சீனாவுக்கு தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவில் தென்சீன கடலில் அமைந்துள்ள அழகிய தீவு நாடுதான் தைவான். பெங்கு உள்ளிட்ட 168 தீவுகளை உள்ளடக்கிய தைவான் நாட்டின் பெரிய தீவான தைவானின் பரப்பளவு மட்டும் 13,826 சதுர கிலோ மீட்டர். தைவானின் வடகிழக்கே ஜப்பான் உள்ளது.



 

இரண்டாம் உலகப்போருக்கு முன் தைவான் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த போரில் ஜப்பான் தோல்வி அடைந்து அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து, சீனா தைவானை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதை விரும்பாத தைவான் மக்கள், சீனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதால் உள்நாட்டு போர் வெடித்தது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி போர் தீவிரம் அடைந்ததால் வேறு வழியின்றி, 1949-ல் தைவானை 'சீன குடியரசு' என்று சீனா அறிவித்தது. கம்யூனிச நாடான சீனா தைவானுக்கு குடியரசு நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது, உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தியது.

இதைத்தொடர்ந்து, தைவான் தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்து கொண்டது. என்றாலும், தைவான் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதிதான் என்றும், அது தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் சீனா அறிவித்தது. வீட்டை காலி செய்த பிறகு அதற்கு சீனா மீண்டும் உரிமை கோரியதை தைவான் மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். தங்கள் நாடு தனி நாடு என்றும், சீனா தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் சீனாவோ தனது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி (மாகாணம்) என்றும், அதை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுடன் வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் சீனா பூச்சாண்டி காட்டுகிறது.

சீனா இப்படி மிரட்டினால், பெரிய அண்ணன் அமெரிக்கா சும்மா இருக்குமா?...

தம்மாத்துண்டு பிரச்சினை கிடைத்தாலே, நம்ம நாட்டாமை தோளில் துண்டை தூக்கி போட்டுக்கொண்டு பஞ்சாயத்து பண்ண கிளம்பிவிடுவார். சீனா சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால் சும்மா உள்ளே புகுந்து கபடி ஆடிவிட மாட்டாரா?

கதாநாயகியை அடைய வில்லன் நெருங்கும் போது, குறுக்கே எம்.ஜி.ஆர். பாய்ந்து வந்து தடுப்பது போல், தைவானை விழுங்க துடிக்கும் 'டிராகனின்' (சீனாவின் தேசிய கலாச்சார அடையாள விலங்கு) குறுக்கே அமெரிக்கா வந்து, 'முடிந்தால் கைவைத்துப்பார்' என்று நிற்கிறது.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்ததை பார்த்த சீனா, தீபாவளி பலகாரத்தை பார்த்த 'சர்க்கரை நோயாளி' போல் கடுப்பாகிவிட்டது.

தைவான் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா கூறுவதை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, தைவானின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான உதவிகளை செய்வோம் என்கிறது. ஏனெனில் வர்த்தகம், முதலீடு, கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் போன்ற துறையில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக தைவான் விளங்குகிறது.

தைவானை சீனா கைப்பற்றினால் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அது தன் அதிகாரத்தை பகிரங்கமாக காட்டமுடியும் என்றும், இது குவாம் மற்றும் ஹவாய் வரையிலான தங்கள் ராணுவ தளத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

இதனால், தைவான் பிரச்சினையில் சீனாவை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, அந்த நாட்டுக்கு ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது.

என்றாலும் சீனா இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பொருளாதார, ராணுவ பலம் இருப்பதால் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு உதவிகளை செய்து, அந்த நாடுகளை தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தைவான் அருகே தனது போர்க்கப்பல்களை நிறுத்துவது, போர் விமானங்களை பறக்கவிடுவது என்று, அவ்வப்போது அந்த குட்டி நாட்டை சீனா மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி வகித்த நான்சி பெலோசி, சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி, கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி தைவான் சென்றார். சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, கோலாலம்பூரில் இருந்து அவர் பயணித்த விமானத்துக்கு பாதுகாப்பாக தைவான் போர் விமானங்கள் சென்றன. அத்துடன் அமெரிக்கா, தென்சீன கடல் பகுதியில் தனது 4 போர்க்கப்பல்களை நிறுத்தி நிலைமையை கண்காணித்தது.

தைவானின் பெண் ஜனாதிபதி சாய்-இங்-வென் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசிய நான்சி பெலோசி, ஜனநாயகத்தை பாதுகாக்க தங்கள் ஆதரவை உறுதிப்படுத்த வந்திருப்பதாகவும், இது அமெரிக்காவின் நீண்டகால கொள்கைக்கு விரோதமானது அல்ல என்றும், எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் அப்போது அவர் சீனாவுக்கு மறைமுகமாக அறிவுறுத்தினார்.

நான்சி பெலோசியின் தைவான் வருகையால் எரிச்சல் அடைந்த சீன அரசு, அமெரிக்கா மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதர் ராபர்ட் நிக்கோலஸ் பர்ன்சை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. அத்துடன், அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தானது என்று கூறியதோடு, நெருப்புடன் விளையாடினால் அழிந்து போவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்தது.

இப்படி வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் தைவானுக்கு வரும் போதெல்லாம் அந்த நாட்டை நோக்கி போர்விமானங்களை அனுப்பி அச்சுறுத்துவதை சீனா வாடிக்கையாக கொண்டுள்ளது.

பீஜிங் நகரில் சமீபத்தில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் ஜின்பிங், சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமான தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்கப்போவதாகவும், தைவான் மக்கள் இதை விரும்பிய போதிலும், சில அன்னிய சக்திகளின் தூண்டுதலால் பிரிவினைவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறி அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் மறைமுகமாக சாடினார். இணைப்பு அமைதியாக இருக்கவேண்டும் என்று சீனா விரும்புவதாகவும், அதற்கு சாத்தியம் இல்லை என்றால் பிரிவினைவாதிகளை ஒடுக்கி தைவானை இணைக்க ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த நிலையில், தொழில்நுட்ப துறையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

செயற்கை நுண்ணறிவு ('ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்') தொழில்நுட்பத்துக்கு அதிநவீன கம்ப்யூட்டர் 'சிப்'கள் பயன்படுத்தப்படுகின்றன. கார்கள், செல்போன்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அதிநவீன 'சிப்'களை இனிமேல் சிறப்பு உரிமம் பெறாமல் ஏற்றுமதி செய்யக்கூடாது என தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் கடிவாளம் போட்டு இருக்கிறது. அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் 'சிப்'களையும் சிறப்பு அனுமதி இல்லாமல் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருக்கிறது.

சீனாவில் அதிநவீன 'சிப்' தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் தங்கள் பணியை தொடரக்கூடாது என்றும், மீறி தொடர்ந்தால் அவர்கள் அமெரிக்க குடியுரிமையை இழக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்ததால் சீன நிறுவனங்களில் பணியாற்றும் அமெரிக்கர்கள் வேலையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது.

இது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த அதிநவீன 'சிப்'களை சீனா உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்றாலும், அதற்கு அதிக முதலீடும், தொழில்நுட்ப வசதியும் தேவைப்படும். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கும் சீனா, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச பொருளாதார, வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது என்று புலம்புகிறது.

அருகில் உள்ள ஹாங்காங்கை சிறப்பு நிர்வாக பிராந்தியமாக அறிவித்து, அங்குள்ள மக்களின் விருப்பத்துக்கு மாறாக அதை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் போல், தைவானையும் விழுங்க கடந்த சில ஆண்டுகளாக பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது சீனா. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல், குட்டி நாடாக இருந்தாலும் தனது பொருளாதார பலம் மற்றும் அமெரிக்காவின் ஆதரவால் சீனாவுக்கு 'தண்ணி காட்டி' வருகிறது தைவான்.

தைவானில் இளைஞர்கள் 4 மாதங்கள் ராணுவ சேவை செய்வது கட்டாயம் ஆகும். சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் 2024-ம் ஆண்டு முதல் இந்த ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்து இருக்கிறது.

இந்த கண்ணாமுச்சி விளையாட்டு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை.

தைவான் பிரச்சினையில் அமெரிக்காவும், சீனாவும் நேருக்குநேர் மோதிக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில், 20 ஆண்டுகள் நடைபெற்ற வியட்நாம் போரில் (1955-1975) ஆழம் தெரியாமல் காலை விட்டு சுமார் 58 ஆயிரம் வீரர்களையும், கோடிக்கணக்கான பணத்தையும் இழந்த 'சூடு கண்ட பூனை' அமெரிக்கா.

ஒருவேளை சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அபகரிக்க முயற்சித்தால், அமெரிக்கா நேரடியாக போரில் குதிக்காது என்றும், அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவக்கூடும் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதாவது, தற்போது ரஷியாவுடன் உக்ரைன் நடத்தும் போரில் அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஆதரவு அளிப்பது போல், தைவானுக்கு அமெரிக்கா உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் களத்தில் அமெரிக்காவும் சீனாவும் மோதிக்கொண்டால், அது 3-வது உலகப்போராக மாறும் ஆபத்து உள்ளது.

''இரும்பு இருக்கிறவன் கையும், சிரங்கு இருக்கிறவன் கையும் சும்மா இருக்காது'' என்று சொல்வார்கள். அந்த மாதிரி இன்று பல நாடுகளிடம் ரசாயன, உயிரி மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளன. யாராவது ஒரு முட்டாள் அணு ஆயுதத்தை பயன்படுத்த தொடங்கினால் மற்றவன் சும்மா இருப்பானா? அவ்வளவுதான்... இந்த உலகம் பேரழிவை சந்திக்க நேரிடும்.

ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

4-வது பெரிய பொருளாதாரம்


* ஐரோப்பாவில் இருந்து கடற்பயணம் மேற்கொண்ட போர்ச்சுக்கல் மாலுமி, தைவான் தீவை கண்டுபிடித்தார். அப்போது அவர் இந்த தீவுக்கு 'பார்மோசா' என்று பெயர் சூட்டினார். 'பார்மோசா' என்றால் அழகிய தீவு என்று பெயர். பின்னர்தான் அந்த பெயர் தைவான் ஆனது.

*தைவான் சிறிய நாடாக இருந்தபோதிலும், ஆசிய கண்டத்தில் பொருளாதார வலிமையில் 4-வது பெரிய நாடாக விளங்குகிறது. தைவானின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி 'தைவான் அற்புதம்' என்ற பெயரில் 1960-களில் தொடங்கியது, அப்போது தொடங்கிய வளர்ச்சி இப்போதும் நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருப்பதால், உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் (ஜி.டி.பி) நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் தைவானின் பொருளாதாரம் உள்ளது. ஒரு நியூ தைவான் டாலரின் (என்.டி.டி.) மதிப்பு ரூ.2.22 ஆகும்.

*தொழில்துறையில் அபார வளர்ச்சி பெற்றுள்ள தைவான், மின்னணு சாதனங்கள் உற்பத்தில் உலகில் முன்னணி நாடாக விளங்குகிறது. எச்.டி.சி., ஆசஸ், பாக்ஸ்கான் நிறுவனங்கள் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. கம்ப்யூட்டர்களுக்கு தேவையான மதர்போர்டு, பேட்டரி, செமி கண்டக்டர், மெமரி கார்டு போன்றவை இங்கு பெருமளவில் தயாராகின்றன. அன்றாட மின்னணு உபகரணங்களான செல்போன், லேப்டாப், கேம் கன்சோல்கள் என பெரும்பாலானவை தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி 'சிப்'களால் இயக்கப்படுகின்றன.

* அதிக அளவிலான மக்கள் இணையதள வசதியை பயன்படுத்துகிறார்கள். தைவான் அரசு பொதுஇடங்களில் மக்களுக்கு இலவச 'வைபை' வசதியை வழங்கி உள்ளது.

* தைவானில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகிறார்கள். 97 சதவீதம் பேர் முகநூலை ('பேஸ்புக்') பயன்படுத்துகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக முகநூல் உபயோகத்தை அரசு ஊக்குவிக்கிறது.

* நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்ற பிரச்சினை இல்லை. 96 சதவீத மக்கள் வேலைக்கு போகிறார்கள்.

* உலகில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் தைவான் 35-வது இடத்தில் இருக்கிறது.

* பொதுவாக கறுப்பு நிறத்தை துக்கத்தின் அடையாளமாக கருதும் பழக்கம் உள்ளது. ஆனால் தைவான் மக்கள் வெள்ளை நிறத்தை துக்கத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். உலகம் முழுவதும் 13-ம் எண்ணை அபசகுமாக கருதும் போக்கு இருந்து வரும் நிலையில், 4-ம் எண்ணை அபசகுனமாக கருதி புறக்கணிக்கும் பழக்கம் இந்த நாட்டு மக்களுக்கு உள்ளது.

* ஆசியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டரீதியிலான அங்கீகாரம் அளித்த முதல் நாடு தைவான் என்பது குறிப்பிடத்தக்கது.

13 நாடுகளின் அங்கீகாரம்



தைவான் 1949 முதல் 1971-வரை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருந்தது. சீனா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 1971-ம் ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு தனிமரம் ஆனது.

ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் கவுதமாலா, பராகுவே, பெலிசி, ஹைதி மற்றும் வாடிகன் சிட்டி உள்ளிட்ட 13 சிறிய நாடுகள் மட்டுமே தைவானை தனிநாடாக அங்கீகரித்து அந்த நாட்டுடன் அதிகாரபூர்வ தூதரக உறவுகளை வைத்து உள்ளன. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற மற்ற நாடுகள் அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதிநிதிகள் மூலம் மட்டுமே தைவானுடன் உறவு வைத்து இருக்கின்றன.

தங்களை தனி நாடு என்று பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்க தயங்குவதால் ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் 'சைனீஸ் தைபே' என்ற பெயரில் தைவான் அங்கம் வகிக்கிறது.

தைவானைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை தாய் சூ யிங், 'சைனீஸ் தைபே' பிரதிநிதி என்ற முறையிலேயே 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆசிய ஒலிம்பிக் போட்டியிலும் இவர் பங்கேற்று உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்