"அரசுக்கு கருணை இருக்கிறது; ஆனால் நிதி இல்லை.." - சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-01-11 13:34 IST

சென்னை,

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், "பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை. பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ரூ. 6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. எங்களுடைய ஆட்சி காலத்தில் சில திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

அதே சமயம் சில திட்டங்களை நிறைவேற்றமுடியாமலும் இருக்கிறோம். நிதி இல்லாத காரணத்தால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணை அரசுக்கு கருணை இருக்கிறது; ஆனால் நிதி இல்லை என ஒருமுறை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். அதே நிலை தான் தற்போதும் உள்ளது.

2011-21 வரையிலான பாதாளத்தில் இருந்து, தமிழ்நாட்டை மீட்டு எடுத்துள்ளோம். தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையால் முடங்கி உள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் மத்திய அரசு விடுவித்தது

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. எத்தனையோ முறை நினைவூட்டி கேட்டிருக்கிறோம். இதுவரை விடுவிக்காத காரணத்தால், மாநில அரசே சொந்த வருவாயை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. தமிழக அரசின் நிலை. இன்னொரு பக்கம் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.4,142 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும், ஆனால் ரூ.732 கோடி தான் வழங்கி உள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியாத நிலை உள்ளது

மத்திய அரசின் சுரங்க திட்டத்திற்கு ஆதரவு அளித்து துரோகம் இழைத்தது அ.தி.மு.க. தான். டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் முதல்-அமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன். தொடர்ந்து டங்ஸ்டன் திட்டம் குறித்து மீண்டும் பேசி மக்களை குழப்புகின்றனர். கண்டிப்பாக டங்ஸ்டன் திட்டம் என்பது இங்கு வராது. உறுதியாக சொல்கிறேன் நான் முதல்-அமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்