தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்ய 17-ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி

வரும் 17-ம் தேதி பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது;

Update:2025-01-11 13:13 IST

சென்னை,

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்தும் பா.ஜ.க., மாநில தலைவரை தேசிய தலைமை மூலம் அறிவிக்கும். மத்திய மந்திரி எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு, விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் தேசியத தலைமையால் இறுதி செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே அடுத்த தலைவர் இவர்தான் என்று தமிழக பா.ஜ.க.வில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் யூகங்களை பரப்பி வருகிறார்கள்.

இந்த சூழலில் மதுரை பா.ஜ.க நிர்வாகிகள் சிலரால், மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் வழி முழுவதும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு என்றும் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்டன. அதே நேரம் பா.ஜ.க.வில் உள்ள பல்வேறு கோஷ்டிகளின் நிர்வாகிகள் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்ய, பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வரும் 17-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே பா.ஜ.க. தலைவர் பெயர் பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்