சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2023-03-02 19:15 GMT

காமராஜர் பஸ் நிலையம்

கடந்த 1966-ம் ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் பெரம்பலூர் ஒரு பேரூராட்சியாக (நகர பஞ்சாயத்து) இருந்தது. அப்போதைய நகர பஞ்சாயத்து தலைவரான அழகேசன் முயற்சியால் பெரம்பலூருக்கு நகர பஞ்சாயத்து பஸ் நிலையம் கட்டப்பட்டது. அந்த பஸ் நிலையத்தை 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். இதனால் அந்த நகர பஞ்சாயத்து பஸ் நிலையம் காமராஜர் பஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

பெரம்பலூர் கடந்த 1995-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாக உதயமானது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

மாவட்டமாக உதயமானபோது பெரம்பலூருக்கு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டதால், பெரம்பலூர் காமராஜர் பஸ் நிலையம் என்பது, தற்போது வரை பழைய பஸ் நிலையம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பெரம்பலூர் தரம் உயர்த்தப்பட்டு 2-ம் நிலை நகராட்சியாக இருந்தாலும், 56 ஆண்டுகளுக்கு மேலாக நகரின் முக்கிய பகுதியாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் திகழ்ந்து வருகிறது.

அந்த பஸ் நிலையத்தை இடித்து விரிவுப்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 1997-ம் ஆண்டு பெரம்பலூர் நகராட்சி சார்பில் ஆலம்பாடி கிராமத்தில் இருந்து கிணற்று தண்ணீரை ஏற்றி நகர்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதற்காக பஸ் நிலைய வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இடிந்து விழும் அபாயம்

பொதுமக்களுக்கு அந்த மேல்நிலை நீர்த்தேக்கத தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2003-2004 நிதி ஆண்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் பெரம்பலூருக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அந்த திட்டம் முழுமையாக கடந்த 2006-ம் பயன்பாட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடில்லாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தொட்டி பராமரிப்பில் இல்லாமலும் போனது.

தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத சிதிலமடைந்த நிலையில் உள்ள அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர பொதுமக்கள், பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கூடுதல் இடம் கிடைக்கும்

பெரம்பலூரை சேர்ந்த சத்யா:- பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி கடைவீதி, ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், தலைமை தபால் நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பஸ்கள் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் வந்து தான் மேற்கண்ட இடங்களுக்கு சென்று வருவார்கள். பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், கடையில் உள்ளவர்கள், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் இடித்து விட்டு புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், தற்போது எந்தவொரு அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தினால் பஸ் நிலையத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரை கையில் பிடித்தவாறு...

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்த ராமச்சந்திரன்:- பழைய பஸ் நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ளது. அதன் அருகே வீடுகளில் வசிப்பவர்களும், கடைக்காரர்களும், தரைக்கடை வியாபாரிகளும், வந்து செல்லும் பயணிகளும் உயிரை கையில் பிடித்தவாறு உள்ளனர். தொட்டியில் இருந்து சிமெண்டு பூச்சுகளும் அடிக்கடி கீழே விழுந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது

துறைமங்கலத்தை சேர்ந்த மதுபாலன்:- பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்துக்கு கிராமப்புற மக்கள் வந்து செல்லும் இடம். அந்த இடத்தில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தொட்டியின் படிக்கட்டுகள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. தொட்டியின் அடிப்பகுதியில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர் பலி வாங்க துடிக்கிறது

குன்னம் தாலுகா, காடூரை சேர்ந்த செல்வகுமார்:- பெரம்பலூருக்கு அடிக்கடி வந்து செல்வேன். பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்க்கும் போது இன்னும் இடித்து அகற்றப்படாமல் உள்ளதே என்ற எண்ணம் எழும். உயிர்பலி வாங்க துடிக்கும் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா கூறுகையில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்