ஆபத்தான வளைவு சாலை சீரமைக்கப்படுமா?

ஆபத்தான வளைவு சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-19 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான வளைவுகள்

கூத்தாநல்லூர் அருகே கிளியனூர், மாதாகோவில் கோம்பூரில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வெண்ணாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளதால் கார், வேன், டிராக்டர், பள்ளி வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடந்த சில மாதங்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் ஒரு சில இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன.

இந்த சாலையில் இடையில் உள்ள பாசன வாய்க்கால் மேல்பகுதியில் அமைக்கப்பட்ட தரைபாலம் மற்றும் தடுப்பு சுவர் அமைந்துள்ள இடத்தில் அடுத்தடுத்து ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதனால் டிராக்டர், கார், வேன், ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களை எளிதில் திருப்ப முடியவில்லை. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கூட கடந்து சென்று வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலை மற்றும் ஆபத்தான வளைவு சாலையையும் சீரமைப்பு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிதாக தரைப்பாலம்

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த முருகவேல் கூறுகையில்,

கிளியனூர் மாதாகோவில் கோம்பூர் சாலை கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வரும் சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த சாலையில் மக்கள் சென்று வருகின்றனர். விவசாய உபகரணங்கள் ஏற்றிச்சென்று வரும் டிராக்டர்கள் மற்றும் ஏனைய சிறிய ரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையில் பாசன வாய்க்கால் உள்ள இடத்தில் அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான தரைப்பாலம் அடுத்தடுத்து ஆபத்தான வளைவில் உள்ளதால், வாகனங்களை ஓட்டிச் சென்று திரும்புவதற்கு பல வகையில் இடையூறாக உள்ளது. அதனால், ஆபத்தான வளைவில் உள்ள குறுகலான தரைபாலத்தை அகற்றி விட்டு, வாகனங்கள் நேராக செல்லக்கூடிய வகையில் புதிதாக தரைப்பாலம் அமைத்து சீரமைப்பு செய்து தந்தால் வாகனங்கள் தாராளமாக சென்று வர வசதியாக அமையும் என்றார்.

கீழே விழுந்து காயம்

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியைச்சேர்ந்த ராஜா கூறுகையில்,

இந்த சாலையில் உள்ள பாசன வாய்க்கால் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அப்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் குறுகலான தரைப்பாலமாக கட்டப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போதைய கால கட்டத்தில் வாகனங்கள் அதிகரித்து விட்டதால், மிகப்பெரிய அளவில் ஆன வாகனங்களும் செல்ல வேண்டியதால் குறுகலான தரைப்பாலம் மற்றும் ஆபத்தான வளைவு வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் ஆபத்தான வளைவில் திரும்பும் போது எதிர் பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தான வளைவு உள்ள சாலையை நேராக அமையும் வகையில் சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்