சேதமடைந்த சாலை சரிசெய்யப்படுமா?

சீர்காழி அருகே சேதமடைந்த சாலை சரிசெய்யப்படுமா? என்று அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-09-03 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே சேதமடைந்த சாலை சரிசெய்யப்படுமா? என்று அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த சாலை

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள கன்னி கோவில் தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. அந்த சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கன்னி கோவில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் மூலம் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை கடந்து தான் கொண்டத்தூர் பகுதிக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார் சாலை தற்போது சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

அடிக்கடி டயர் பஞ்சர்

இதனால் மேற்கண்ட சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் இந்த சேதமடைந்த சாலையில் நடந்து செல்லும் போது மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது.

இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டி செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்