செய்யாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?

செய்யாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-09 17:29 GMT



செய்யாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த தரைப்பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

செங்கத்தில் இருந்து தளவாநாயக்கன்பேட்டை, கிருஷ்ணாபுரம், காந்திநகர், பரமனந்தல், குப்பநத்தம், மில்லத்நகர் வழியாக புதுப்பாளையம், போளூர் செல்ல செங்கம் பேரூராட்சியில் ராமகிருஷ்ணா பள்ளி அருகே செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இது, பிரதான இணைப்பு பாலமாக பல வருடங்களாக இருந்து வந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.எஸ்.சுரேஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில், செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாயக்கன்பேட்டையை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.

தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டதாலும், தரைப்பாலத்தில் அதிக வாகனங்கள் சென்று வருவதாலும் செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாயக்கன்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் வலுவிழந்து பழுதாகி விட்டது. தரைப்பாலத்தின் இரு பக்கமும் உள்ள தடுப்புக்கம்பிகள் முற்றிலும் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

சேதமடைந்த தரைப்பாலம் குறித்து செங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- 



முனிரத்னம்:- கடந்த சில வருடங்களில் வரலாறு காணாத வெள்ளம் செய்யாற்றில் வந்த போது, இந்த தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியது. பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மழை காலங்களில் செய்யாற்றில் ஓடும் வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கி பயன்படுத்த முடியாத சூழலில் பொதுமக்கள், மாணவர்கள் நகரை சுற்றி கொண்டு போளுர் ரோட்டில் ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள மேம்பாலம் வழியாக செங்கம் நகருக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

தளவாநாயக்கன்பேட்டை மட்டுமின்றி கிருஷ்ணாபுரம், பரமனந்தல், காந்திநகர், நேருநகர், குப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் வரும் பொதுமக்கள் நகரின் மையப் பகுதிக்கு விரைவாக செல்ல செய்யாற்றின் குறுக்ேக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்கள், நடந்து செல்வோர் என பலதரப்பட்ட மக்கள் தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் நேரில் ஆய்வு



செங்கம் பேரூராட்சியை சேர்ந்த ராஜேந்திரன்:- இறப்பு சம்பவம் நடந்து விட்டால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல ெசய்யாறு தரைப்பாலத்தை தான் கடக்க ேவண்டும். தரைப்பாலம் குண்டும் குழியுமாக உள்ளது. தரைப்பாலம் வழியாக அனைத்து அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் சென்று வருகின்றனர். ஆனால் தரைப்பாலத்தை சீரமைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.



செந்திபெருமாள்:- தளவாநாயக்கன்பேட்டை, துர்க்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை இணைக்க எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த போது அப்போதைய செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் நேரில் வந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு பல வருடங்களாக ஆட்சிகள் மாறினாலும் தரைப்பாலத்தின் காட்சி மாறவே இல்லை. பராமரிப்பின்றி மழை காலங்களிலும், ஆற்றில் பலமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் தரைப்பாலம் வலுவிழந்து உள்ளது. தரைப்பாலத்தை சரி செய்து, கம்பி வேலி அமைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்