கஞ்சா நகரம் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-05-22 18:45 GMT

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாசன வசதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.8 கோடியில் பாசன, வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி காவிரி ஆற்றில் இருந்து மணக்குடி, கஞ்சாநகரம், மேலையூர், கருவாழக்கரை ஆகிய கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்களுக்கு பாசனவசதி அளிக்கக்கூடிய கஞ்சாநகரம் வாய்க்காலில் செடிகொடிகள், புதர்கள் மண்டி தூர்ந்துபோய் உள்ளது. இதனால் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வந்து பாய்வதற்கு வழியில்லை என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் வரையில் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் பெரிய ஆறுகளில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர்செல்லும் பல வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோய் இருந்தது. இதனால் காவிரிநீரை முழுமையாகப்பயன்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டும் தற்போது வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் ஜூன் முதல் வாரத்தில் அணை திறக்கப்படலாம் என்று ஆர்வத்துடன் விவசாயிகள் உள்ளனர்.

தூர்வார கோாிக்கை

காவிரிநீர் விளைநிலங்களுக்கு முழுமையாக சென்றடைவதற்காக ஏ, பி, சி, டி பிரிவு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். மயிலாடுதுறை சேந்தங்குடியில் இருந்து பிரியும் கஞ்சாநகரம் வாய்க்கால் மணக்குடி, கஞ்சாநகரம், மேலையூர், கருவாழக்கரை ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் செடிகொடிகள் மண்டி தூர்ந்து போய் உள்ளது.

தற்போது கஞ்சாநகரத்தில் இருந்து பிரிந்துசெல்லும் கிளைவாய்க்காலும் தூர்ந்துபோய் கிடப்பதால் ஆற்றுநீரை நம்பி சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

எனவே மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி காவிரிநீரை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்