காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமா? - அமைச்சர் துரைமுருகன்
உபரி நீரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணங்கள் தங்களுக்கும் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேட்டூர்,
மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர் அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேட்டூர் அணைக்கு திறந்துவிடும் நீரை, தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணாக்குவதாக கர்நாடகா கூறுகிறது. அதேநேரம் தமிழக சாகுபடிக்கு தேவைப்படும்போது மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை தராமல் இழுத்தடிப்பது ஏன் என தெரியவில்லை. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மாயாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. அதன்பின்னர் கதவணைகள் தான் கட்டி உள்ளோம். தற்போது தடுப்பணைகள் அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் ஒரு சில இடங்களில் குழாய்களை பதிப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற வழக்கு முடிவடைந்த உடன், இந்த திட்டம் உடனடியாக தொடங்கப்படும். காவிரி நதி நீரை பங்கீடு செய்வதில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமா? என்ற ஐயப்பாடு எழும்பி உள்ளது. கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு காவிரியின் கடைமடை பகுதியில் உள்ள தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் அணை கட்ட முடியாது.
காவிரி மேலாண்மை குழு என்பது காவிரி நதிநீர் பங்கீட்டின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை அளிக்கிறதா? என்பதை கண்காணிப்பது அதனுடைய பணி. ஆனால் கர்நாடகத்தில் அணைக்கட்ட ஒப்புதல் அளிப்பதில்லை. எனவே மத்திய அரசின் தூண்டுதலினால் இதுபோன்று நடக்கிறதோ? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.