ம.ரெட்டியபட்டிக்கு பஸ் இயக்கப்படுமா?
திருச்சுழியில் இருந்து ம.ரெட்டியபட்டிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழியில் இருந்து ம.ரெட்டியபட்டிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் வசதி
திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ம.ரெட்டியபட்டியில் உள்ளது. இந்நிலையில் திருச்சுழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏராளமான கிராம மக்கள் எளிதில் ம.ரெட்டியபட்டியில் உள்ள திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வர நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திருச்சுழி தாலுகாவில் உள்ள பண்ணை முன்றடைப்பு, புலிக்குறிச்சி, உடையனாம்பட்டி, சென்னல்குடி, திருச்சுழி, உள்பட அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பசுமை வீடுகள், தனிநபர் கழிப்பறை, வறுமை ஒழிப்பு திட்டம், மகளிர் கூட்டமைப்பு, 100 நாள் வேலை மற்றும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவகம் செல்ல வேண்டி உள்ளது.
நேர விரயம்
ஆதலால் திருச்சுழி பகுதி மக்கள் திருச்சுழி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சுழியில் இருந்து இராமலிங்காமில் வந்து பின்னர் மற்றொரு பஸ் பிடித்து ம.ரெட்டியபட்டி செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் நேர விரயம், பணம் விரயம் போன்ற சிரமங்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர்.
எனவே திருச்சுழியில் இருந்து தமிழ்பாடி, ஆலடிபட்டி வழியாக ம.ரெட்டியபட்டிக்கு பஸ் இயக்க வேண்டும். இதுகுறித்து திருச்சுழி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.